ஈரம் - 2

ஈரம் - முதற்பாகம்



“அக்கா, எனக்கு பயமா இருக்குக்கா..!” என்றான் தனபாலன்.

“பயப்படாதே, சரியா.. அய்யாசாமிய மனசுல நெனச்சிக்கோ..” என்று தன் தம்பியை சமாதானப்படுத்தினாள் சாந்தினி.

சாந்தினி தனபாலனின் நடுங்கிக் கொண்டிருந்த கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு எழுந்தாள். எல்லாரையும் புத்தகப்பைகளை பேருந்திலேயே வைத்துவிட்டு மெதுவாக நடக்கும்படி உத்தரவிட்டு ஒன்றன்பேர் ஒன்றாகப் பிள்ளைகளை தூக்கி இறக்கினான் பேருந்து ஓட்டுநரான அந்தச் சீனன். பேருந்தில் எல்லா பிள்ளைகளும் ரயில் வண்டிபோல் அணிவகுத்து, ஒருகை இன்னொருவரின் தோளைப் பற்றிக் கொண்டும், மற்றொரு கை இருக்கைக் கம்பியைப் பிடித்துக் கொண்டும் நின்றனர். பயந்துக்கொண்டே ஆமை வேகத்தில் நகர்ந்து ஒருவழியாக சாந்தினியும் தனபாலனும் பேருந்து படிக்கட்டுகளில் வந்து நின்றார்கள்.



“அக்கா, இன்னிக்கு அம்மா கிழங்கு பொரிச்சி தரேன்னு சொன்னாங்க..” என்றுக் கூறிய தனபாலன் சாந்தினியை கவலையாகப் பார்த்தான்.

“அதுலாம் பொரிச்சித் தருவாங்க.. நீ மொத இறங்குடா..” என்றாள் சாந்தினி.

சீனன் இருவரையும் தூக்கி கீழே இறக்கி வைத்தான். வெள்ளைக் காலணிகள் செம்புலநீரோடு உறவாடின. அடுத்த வினாடி அனைவரின் காலணிகளும் சேற்றின் வண்ணத்தை அப்பிக் கொண்டு காட்சியளித்தன. சாந்தினியும் தனபாலனும் ஒருவரையொருவர் கவலைத் தோய்ந்த முகத்தோடு பார்த்துக் கொண்டனர்.

சேரும் சகதியுமாய் இருந்த அந்த செம்மண் பாதையில் இருந்த ஒரு பெரிய குழியில் பள்ளிப்பேருந்தின் முன் சக்கரம் ஒன்று சிக்கியிருந்ததைச் சாந்தினி கண்ணுற்றாள். பேருந்து சிக்கியிருந்த இடத்திலிருந்து 20 அடி தூரத்தில் ஆற்றுப் பாலம் ஒன்று தென்பட்டது. மழைக்காலமாதலால் ஆறும் கரைப்புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்திருந்ததால், ஆற்றின் நீர் பக்கத்தில் இருந்த செம்பனைக் காட்டுக்குள் வழிந்து வெள்ளக்காடாகக் காட்சி அளித்தது.

பாவம் , அனைவருக்கும் அங்கு உட்காருவதற்குக் கூட இடமில்லை. பிஞ்சுக் கால்கள் சேற்றில் நின்றுக் கொண்டிருந்தன. சீனன் ஒருவழியாக அனைவரையும் இறக்கிவிட்டுப் பேருந்தினுள் நுழைந்தான். அனைவருடைய புத்தகப்பைகளையும் ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்தான். சாந்தினியும் தனபாலனும் தத்தம் புத்தகப்பைகளை வாங்கி மாட்டிக் கொண்டனர். இன்னும் சரியாக விடியாததனால், இருட்டில் பாலத்தைக் கடப்பது மிகவும் அபாயம் என்று கருதியவன், அனைவரையும் அங்கேயே நிற்குமாறு பணித்தான்.

எங்கிருந்தோ பறந்து வந்த கொசுக்கள் தன் பிஞ்சுக் கரங்களில் துளைபோட்டு ரத்தம் உறிஞ்சிக் கொண்டிருப்பதையும் உணராதவனாய், மறுத்துப்போன உணர்வோடு செம்பனைக்காடு வெள்ளக்காடாய் மாறிப்போயிருப்பதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் தனபாலன். பேருந்தை அலட்சியத்தோடு செலுத்தி குழியில் விட்டுவிட்ட சீனன் தலையில் கையை வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருப்பதை சாந்தினி பரிதாபத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அனைவரையும் ஆபத்திலிருந்து காப்பாற்றிய ஒரு ஹீரோவாகவே சாந்தினியின் கண்களுக்கு அவன் காட்சியளித்தான்.

________________________________________________________________



செம்பனைக் கொட்டைகளை பிழிந்து சக்கைகளை வெளித்தள்ளும் 'பெல்ட்'டில் பழுது ஏற்பட்டிருந்ததால், சிங்காரம் காலையுணவு உட்கொள்ளாமலேயே பழுது பார்க்கும் வேலையில் மும்முரமாக இருந்தார். அவர் இயந்திரங்களில் கைவைக்காமல் இயந்திரங்கள் செயல்படாது, எந்தவொரு வேலையும் நடக்காது என்ற நிலை அங்கிருந்தது. ‘கேம்ப்ரிட்ஜ்' பல்கலைக்கழகத்தில் ‘மெக்கனிக்கல் எஞ்ஜினியரிங் செர்ட்' கல்வியை அஞ்சல் மூலம் கற்று சாதாரண ஒரு செம்பனை ஆலையில் மெக்கனிக்காக இருக்கும் சிங்காரத்திற்கு அங்குள்ளவர்களிடம் நல்ல மரியாதையிருந்தது. கடின உழைப்பு, சோர்வை வெளிக்காட்டாது துருதுருவென்று ஏதாவது வேலைகளை எடுத்துப் போட்டு செய்வது என நன்மதிப்பை பெற்ற சிங்காரத்தை ஆலை நிர்வாகம் நன்றாக கவனித்து வந்தது. அன்று அவர் 'பெல்ட்டை' பழுதுபார்க்கும் வேலையில் மும்முரமாய் இருந்த சமயம்..


”சிங்காரம்.. உனக்கு ஃபோன் வந்திருக்கு..!”

“யாரு..?”

“உன் பொம்பளதான்..ஸ்பானர குடு, நான் பாத்துகுறேன்..” என ஃபோர்மேன் ராஜூ ஸ்பானரை வாங்கிக்கொள்ள, சிங்காரம் கடுகடுத்த முகத்தோடு அவரின் தனிப்பட்ட அலுவலகத்திற்கு விரைந்தார்.

“ஹலோ....”

”என்னங்க... நான்தான் பேசுறேன்..!”

“ஏய், என்னாடி.. என்ன வேணும்.. வேலையா இருக்கேன்! சீக்கிரம் சொல்லு!”

"ஸ்கூல்லேர்ந்து ராதா டீச்சர் ஃபோன் பண்ணாங்க, நம்ப பிள்ளங்க இன்னும் ஸ்கூல்க்கு வரலேன்னு சொல்றாங்க.. எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க.. போற வழிலாம் ரொம்ப வெள்ளமா இருக்காம்..போயி பாத்துட்டு வாங்கங்க..” என்று நா தழுதழுக்க கூறினாள் மகேஸ்வரி.

”சரி.. நான் போயி பாக்குறேன்..”

இதுநாள்வரை வேலை நேரத்தில் சிங்காரம் வெளியே அனுமதிகேட்டுக் கூடச் சென்றதில்லை. ஒருபுறம் மேனேஜரிடம் அனுமதி கேட்க சங்கடமாக இருந்தாலும், மறுபுறம் பெற்ற பிள்ளைகளாயிற்றே! அவர்களுக்காகத்தானே இந்த உயிர் இன்னும் உழைக்கிறது.

அதிகம் யோசிக்காது மேனேஜரைப் பார்க்க விருவிருவென்று நடந்தார் சிங்காரம்.

“சிங்காரம், அபசால், பிகி மானா..?” சிங்காரத்தின் நண்பரும் ஆலையின் மேனேஜருமான ஸ்டீவன் எதிர்ப்பட்டார்.

“பாகி தாடி சயா டா ஹந்தார் அனாக்-அனாக் சயா கெ ஸ்கோலா.. தாபி சம்பை ஸ்காரங் டியோராங் தாக் சம்பாய்..!”
(என் பிள்ளைகளை காலையிலேயே பள்ளிக்கு அனுப்பிவிட்டேன், ஆனால் இன்னும் பள்ளி சென்று சேரவில்லை!”)

சிங்காரத்தின் மனநிலையைப் புரிந்துகொண்டவர்,

”என்ஜீன் தாக் பெந்திங், ஆனாக் யாங் பெந்திங்.. பிகி தேங்கோக்..செப்பாட்”
(”இயந்திரம் முக்கியமில்லை, பிள்ளைகள்தான் முக்கியம், சீக்கிரம் போய் பார்த்துவிட்டு வா..!”)

ஃபோர்மேன் ராஜூவிடம் பழுது வேலையை ஒப்படைத்துவிட்டு சிங்காரம் வெளிகிளம்பினார்.

சிங்காரத்தின் மோட்டார் குண்டும் குழியுமான செம்மண் சாலையில் விரைந்தது...

2 பேரு வெத்தல போட வந்தாங்க..:

சுப.நற்குணன்,மலேசியா. said...

மலேசியத் தமிழ் வலைப்பதிவு அன்பரே,
வணக்கம்! வாழ்க! தமிழ்நலம் சூழ்க!

தங்களுக்குப் பொங்கல்,
திருவள்ளுவராண்டு 2040
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

தமிழிய விழுமியங்களோடு
தமிழியல் வழியில் வாழ்ந்து
வெற்றிகள் பெறுவோம்.

தங்கள் வலைப்பதிவை என்னுடைய
'திருமன்றில்' திரட்டியில்
இணைத்துள்ளேன்.

http://thirumandril.blogspot.com
பார்க்கவும். நன்றி..!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment

தமிழ்ல சொல்லணுமா, இங்க தட்டுங்க.. தமிழ் தட்டசுவான், வந்து வெத்தல போட்டதுக்கு நன்றி.. :)

என்னைப் பற்றி..

My photo
அதான் தெரியிலிங்க..தேடிகிட்டு இருக்கேன்,கண்டுபுடிச்சேனா கண்டிப்பா சொல்றேன் நான் யாருன்னு..

இப்ப மணி..

பதிவெண்


Template Brought by :

blogger templates