ஈரம் - பாகம் 1

படார்..! என்றொரு சத்தம். தனபாலன் முன் இருக்கையில் முட்டிக் கொண்டான். சாந்தினி ஜன்னலில் முட்டிக் கொண்டாள். அரைத்தூக்கத்தில் இருந்த இருவரும் முட்டிக் கொண்டதையடுத்து, வலியால் தலையை தடவிக் கொண்டே கண்களை அகலத் திறந்துக் கொண்டு சுற்றி முற்றிப் பார்த்தனர். அவர்களுக்கு முன்பக்கம் அமர்ந்திருந்த ஓர் அஸ்லீ பையன் கீழே புத்தகப்பையோடு விழுந்திருந்தான். பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த மாரியம்மாவின் காலை உணவு கீழே கொட்டிக் கிடந்தது. ஒரு சிலரின் புத்தகங்களும் புத்தகப்பைகளும் கீழே சிதறிக் கிடந்தன. பின்னிருக்கையில் அமர்ந்திருந்த பாலா தொண்டையைக் கிழிக்க ஆரம்பித்துவிட்டான்.

“செமுவா ஜாங்கான் தாக்கோட்.. ஜாங்கான் தாக்கோட்..!” என்றபடியே ஒரு சீனன் தட்டுத்தடுமாறி நடந்து வந்து, விழுந்தப் பையனை தூக்கி நிறுத்தினான். பாலாவை அழாமல் சமாதானப்படுத்தினான். அனைவரும் இருக்கைகளின் கம்பிகளைப் பலமாகப் பிடித்துக் கொண்டு சாய்வாக அமர்ந்திருந்தனர். வழக்கத்திற்கு மாறாக பேருந்து 30 பாகையில் சாய்ந்திருந்ததைக் கண்ட அனைவரின் முகங்களிலும் கலவரம் தென்பட்டது.


__________________________________________________________

காலை 7.30 மணிக்கு 2 வள்ளுவர் வகுப்பில் வகுப்பாசிரியை ராதா மாணவர்களின் பெயர்களை வாசித்துக் கொண்டிருக்கின்றார். பெயர் வாசிக்கப்பட்டவர்கள் “உள்ளேன் டீச்சர்” என பதிலளிக்க ஆசிரியை வருகைப் பட்டியலில் குறித்துக் கொள்கிறார். சாந்தினியின் பெயரை வகுப்பாசிரியை வாசித்ததும் “வரலே டீச்சர்..” என்று ஒருசிலர் பதிலளித்தனர்.

“ஏன் வரலே..வெள்ளமா…?”

“இல்ல டீச்சர்..இன்னிக்கு காலைலே சாந்தினியும், தனபாலனும் பஸ்ஸுக்கு வேட் பண்ணிகிட்டு இருந்துச்சுங்க.. நான் பாத்தேன்..” என்றான் மாணவன் சரவணன்.

“பிறகு ஏன் இன்னும் பள்ளிக்கு வரவில்லை..? படிப்பு இப்படி வீண் ஆகிறதே” என்று மனதில் சாந்தினியை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டார் ஆசிரியை ராதா. சாந்தினி படிப்பில் மிகவும் கெட்டிக்காரி. ஆனால் இசைக்கல்வியில் மட்டும் முட்டைதான் கிடைக்கும் அவளுக்கு. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இசைக்கல்வி நடைப்பெறும்பொழுது சாந்தினி வகுப்பில் இருக்க மாட்டாள். இதற்கு இரு காரணங்கள் இருக்கும், ஒன்று, வெள்ளம், மற்றொன்று தாமதம். சொல்லிவைத்தாற்போல் அன்று வெள்ளிக்கிழமை.

“ஒருவேளை உடல் நலம் இல்லாமல், மீண்டும் வீட்டிற்குச் சென்றிருக்கக்கூடுமோ..? சரவணன்..! இங்கே வா…?” என்று ஒரு மாணவனை அழைத்தார் ஆசிரியை ராதா.

“ ஆண்டு 1 வள்ளுவர் வகுப்புக்கு போயி, தனபாலன் வந்துருக்கானான்னு பாத்துட்டு வா..”

ஓடிச்சென்று பார்த்துவிட்டு வந்த சரவணன், “டீச்சர், வரலே டீச்சர்..” என்றான்.
__________________________________________________________

விடியற்காலை மணி 5 என கடிகாரம் அலாரம் அடித்துக் கூறியது.

“ஏய் மகேசு, இங்க வா…!”

“யேங்க..!”

“என்னாடி இது…!”

“யேங்க, சப்பாத்த காணோமா…?” என்று கேட்டவள் கணவரின் காலணிகளைத் தேட எத்தனித்தாள் மகேஸ்வரி.

“சப்பாத்து இருக்கு, பிள்ளைங்க சப்பாத்த பாத்தீயா..?”

“யேன், பிள்ளைங்க சப்பாத்துக்கு என்ன இப்ப..?”

“ஏன் இப்படி அழுக்கா இருக்கு..?!”

“நேத்துதாங்க வெள்ளை அடிச்சேன், அதுக்குள்ளே இப்படி அழுக்காக்கிட்டு வந்துருக்குதுங்க.. நேத்து சாயங்காலமே அதுங்கல பூச சொன்னதுக்கு, பூசாமே ஒரே ஆட்டம், இன்னிக்கு டீச்சர் பாத்தா வாங்கட்டும் நல்லா” என்றாள் மகேஸ்வரி.

“ஏய், ஒழுங்கா வெள்ளைய எடுத்து இப்ப பூசி வெக்கிற.. என் பிள்ளைங்க பிச்சைக்காரிங்க மாறி ஸ்கூலுக்கு போகணும்னு அவசியம் இல்ல.. இப்ப பூசி வெக்கில நீ என்கிட்ட வாங்கிருவே..!” என்று கண்டிப்பாக கூறிவிட்டு சிங்காரம் வேலைக்குக் கிளம்பத் தயாரானார்.

“வெள்ளை முடிஞ்சி போச்சி..”

“ஏய், என்னாடி கதை சொல்றே.. வீட்டுல எவ்ளோ வாங்கி வெச்சிருக்கேன்…! இப்ப நான் எடுத்துட்டு வந்தேனா?” என்றவர் வீட்டினுள் நுழைந்தார்.

மகேஸ்வரி துடைப்பத்தை எடுத்தாள் வீட்டு வாசலைப் பெருக்க.

“ஏங்கா, காலைலே மனுஷன் கத்திகிட்டு இருக்காரு..?” பக்கத்து வீட்டு செண்பகம் வாசலைப் பெருக்கிக் கொண்டே கேட்டாள்.

“சப்பாத்து வெள்ள முடிஞ்சிருச்சி, நானும் சொல்ல மறந்துட்டேன்.. அதான் கத்திகிட்டு இருக்காரு, அவருக்குத்தான் பிள்ளைங்க ஸ்கூலுக்கு சுத்தமா போகலேன்னா கோபம் வந்துரும்மே..”

“இருங்க, நான் எடுத்துட்டு வரேன், பூசி வெச்சிருங்க,,” என்றவள் வீட்டிலிருந்து காலணி வெள்ளைப்பூச்சை எடுத்து வந்துக் கொடுத்தாள்.

மகேஸ்வரி காலணிகளுக்கு வெள்ளைப் பூசத் தொடங்கினாள்.

சிங்காரம் வீட்டிலிருந்து வெளியே வந்தவர், “ஏய், எங்கடி.. அவ்ளோ வாங்கி வெச்சிருந்தேன், எப்டி முடிஞ்சிச்சி..?”

“இருக்கு.. இருக்கு…” என்று முனகினாள் மகேஸ்வரி.

“ஆங்… இப்ப எப்படி வந்துச்சி.. பிள்ளைங்க சப்பாத்துக்கு வெள்ள பூசறதுக்குக்கூட சோம்பேறியா இருக்கா..” என்று திட்டிக் கொண்டே சிங்காரம் காலணிகளை அணிந்துக் கொண்டிருந்தார்.

“இப்ப பூசுனா ஈரமா இருக்காதா..? இன்னும் கொஞ்ச நேரத்துல ஸ்கூல் பஸ் வேற வந்துரும்.. எப்டிதான் போட்டுட்டு போகும்ங்க…”

“அந்த அறிவு நேத்தே இருந்திருக்கணும், ஒழுங்கா பூசி வை..!” என்றவர் மோட்டார் வண்டியை எடுத்தார்.

“யேங்க, வரும்போது சப்பாத்து வெள்ளைய வாங்கிட்டு வந்துருங்க.. இதுதான் கடைசி முடிஞ்சிருச்சி..”

“ஆங்.. வேற எதாச்சும் வேணுமா, இப்பவே சொல்லிரு, அப்புறம் கம்பெனிக்கு கால் பண்ணிட்டு வேலையா இருக்கும்போது ஒன்னு ஒன்னா சொல்லிகிட்டு இருக்காதே,,”

“வரும்போது கடுகுக்கீரையும், உருளைக்கிழங்கும் வாங்கிட்டு வந்துருங்க..” என்றாள் மகேஸ்வரி.

சிங்காரம் வீட்டிலிருந்து புறப்பட்டதும், மகேஸ்வரி குளியலைறைக்குச் சென்றாள். அங்கு வெண்ணீரில் குளித்துக் கொண்டிருந்த சாந்தினியையும் தனபாலனையும் துவட்டிவிட்டு பள்ளிச் சீருடைகளை அணிவித்தாள். பின் இருவருக்கும் காலைப் பசியாறல் செய்துவிட்டு, வீட்டின் வெளியே காலணிகளை அணிவித்தாள்.

“ஈரமா இருக்கா செல்லம்…?"

இல்லையென்று சாந்தினி தலையாட்டினாள்.

“பாரு, இன்னிக்கு உங்க ரெண்டு பேருனால அப்பாகிட்ட நல்ல திட்டு வாங்கிட்டேன்..”
தனபாலன் சிரித்தான்.

“இனிமே ஸ்கூல்ல ஆட்டம் போடக் கூடாது, சப்பாத்து அழுக்கா இருந்துச்சி, அப்புறம் இருக்கு ரெண்டு பேத்துக்கும்.. இன்னிக்கு சப்பாத்து சுத்தமா இருந்துச்சுனா, அம்மா ரெண்டு பேத்துக்கும் புடிச்ச உருளைக்கிழங்குப் பொறியல் செஞ்சு வெக்கிறேன், சரியா..” என்றதும் சாந்தினியும் தனபாலனும் ஆர்வத்தோடு தலையாட்டினர்.

வீட்டிலிருந்து 50 மீட்டர் தொலைவில் ஒரு சிறிய அய்யா கோயில் ஒன்றினருகே மகேஸ்வரி தனது குழந்தைகளை உட்காரவைத்துவிட்டு நின்றுக் கொண்டிருந்தாள். செண்பகமும் அவளது ஏழு வயதுப் பையன் பாலாவை கூட்டிக் கொண்டு வந்தாள்.

“என்னக்கா, ஊட்டுகாரரு வேலைக்குப் போய்ட்டாரா?”

“போய்ட்டாரு செண்பகம், நல்ல வேலை சப்பாத்து வெள்ளை கொடுத்த, இல்லாட்டி அதுக்கு ஒரு சண்ட நடந்துருக்கும்..” என்றாள் மகேஸ்வரி.

“ம்ம்.. என்னக்கா இன்னிக்கு இந்த பஸ்காரன்னே காணோம், எப்போதும் 5.40 மணிக்கே வந்துருவானே…”

“அதான் தெரியல..”

10 நிமிடங்கள் கழிந்தன. ராமசாமி தன் மகன் சரவணனை மோட்டார் வண்டியில் ஏற்றிக் கொண்டு அந்த வழியாக வந்துக்கொண்டிருந்தார். அய்யா கோயிலருகே வந்ததும், கோயிலில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீப ஒளியில் சில உருவங்கள் நின்றுக் கொண்டிருந்ததை அவரால் கவனிக்க முடிந்தது. ராமசாமி மோட்டாரை நிறுத்தினார்.

“என்னங்க, இன்னும் பஸ்சு வரலியா..?”

“இன்னும் காணோங்க.., அதான் நின்னுகிட்டு இருக்கோம்.. எப்போதும் 5.40க்குலாம் வந்துருவான்” என்றாள் செண்பகம்.

“ம்ம்.. வேணுன்னா இன்னும் ரெண்டு பேர ஏத்திக்கிறேன்..” என்றார் ராமசாமி.

“இங்க மூணு பிள்ளைங்கலே இருக்கு, பரவாலிங்க..” என்றாள் மகேஸ்வரி.

ராமசாமியின் பின் அமர்ந்திருந்த சரவணன், சாந்தினியையும் தனபாலனையும் பார்த்து கையசைத்தான். இருவரும் அவனைப் பார்த்து புன்னகைத்து கையசைத்தனர். ராமசாமி மகன் சரவணன், சாந்தினியோடு ஒரே வகுப்பில் பயில்பவன். சாயங்காலங்களில் மூவரும் வீட்டின் அருகே ஓடிக்கொண்டிருக்கும் கால்வாயில் தவளைக் குஞ்சை மீன் என நினைத்துப் பிடித்து விளையாடுவது வழக்கம். எவ்வளவுதான் வார்ப்பட்டையில் அப்பாவிடம் அடி வாங்கினாலும், கால்வாயில் மீன் பிடிப்பதை அம்மூவரும் விடவில்லை. ஒரு நாளைக்கு ஒரு மீனையாவது கையால் பிடித்துப் பார்க்கவில்லையென்றால் அவர்களுக்குப் பொழுது போகாது, அப்படியொரு நட்பு அவர்களுக்கிடையே.

“சரிங்க.. பிறகு பாக்கலாம்..” என்றுக் கூறிவிட்டு ராமசாமி அங்கிருந்து கிளம்பினார். அவர் மோட்டார் வண்டியில் செல்வதை சாந்தினியும் தனபாலனும் பார்த்துக் கொண்டே இருந்தனர். கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு வளைவில் அவரது மோட்டார் வண்டி புகுந்து மறைந்ததும் வெளிச்சம் ஒன்று அங்கு நிழலாடியதை இருவரும் கவனித்தனர். முதலில் மங்கலாக இருந்த வெளிச்சம், வர வர பிரகாசமாகத் தெரியத் தொடங்கியதும்,

“அம்மா, பஸ்சு வந்துருச்சி..!” என்று சாந்தினி கைக்காட்டினாள்.

தொடரும்..

0 பேரு வெத்தல போட வந்தாங்க..:

Post a Comment

தமிழ்ல சொல்லணுமா, இங்க தட்டுங்க.. தமிழ் தட்டசுவான், வந்து வெத்தல போட்டதுக்கு நன்றி.. :)

என்னைப் பற்றி..

My photo
அதான் தெரியிலிங்க..தேடிகிட்டு இருக்கேன்,கண்டுபுடிச்சேனா கண்டிப்பா சொல்றேன் நான் யாருன்னு..

இப்ப மணி..

பதிவெண்


Template Brought by :

blogger templates