டிக்கோ..!

என் சிறு வயதில் நடந்த சிறு சிறு நிகழ்வுகளை சிறுகத் தொகுத்து உங்களுடன் சிறிது நேரம் பகிர்ந்துக் கொள்கிறேன்.

அப்பொழுது எனக்கு 5 வயது இருக்கும். "இளங்கன்று பயமறியாது" என்பார்களே, அது எனக்கு முற்றிலும் பொருந்திய வயது அப்பொழுது. வீட்டில் கழியா நேரங்களை விட வெளியே ஊர் மேய்வதில் நன்கு கழிந்ததனால்தான் அதன் நினைவுகள் இன்றும் மனதில் பசுமரத்தாணியைபோல் இருந்து கொண்டு இன்று என்னை எழுதத் தூண்டியிருக்கின்றன. நான் அப்பொழுது என் தாத்தா வீட்டில் தங்கியிருந்தேன். தாத்தா ஜே.கே.ஆரில் வேலை செய்து வந்ததனால் அவருக்கு குவார்ட்டர்ஸ் வீடு கொடுத்திருந்தார்கள். ஜே.கே.ஆர் குவார்ட்டர்ஸ்சில் சுமார் 25 கல்லாலான வீடுகள் வரிசையாக கட்டப்பட்டிருக்கும். 'ஜே.கே.ஆர் குவார்ட்டர்ஸ்' இந்தியன் செட்டில்மெண்ட் எனும் இந்தியர்களின் பெரிய குடியிருப்புப் பகுதியில் அமைந்திருந்தது.

அங்கு வாழ்ந்த மக்களில் 90 சதவிகிதத்துக்கும் மேல் கடுமையான உடலுழைப்புத் தொழிலாளிகள். 75 சதவிகிதம் இந்தியர்கள், 20 சதவிகிதம் மலாய் இனத்தவர், 5 சதவிகிதம் சீனர்கள் வாழ்ந்துவந்த இந்தியன் செட்டில்மெண்ட்தான் என் குழந்தை பருவத்திற்கு முழுமையடைந்த ஓர் உலகம். அதைவிட்டால் வேறுலகம் எனக்கில்லை! அந்த வயதில் என்னைத் தூக்கி வளர்த்தது என் அம்மாவும் உறவினர்களும் மட்டுமல்ல, அங்கு வாழ்ந்த சமுதாயமும்தான். இன்றைய நவீன உலகத்தில் நான் மிகவும் ஏங்கி ஏங்கி தேடிக் கொண்டிருக்கும் அதுபோன்ற உறவுப் பிணைப்புகள் இன்று எங்கு தேடியும் காணக் கிடைக்காது துவண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு சமூகம் அன்று அங்கு வாழ்ந்து என்னை உருவாக்கிவிட்டு மறைந்து போனது. ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்று பிறர் குடும்பத்தின் சுக துக்கங்களை தனதெனக் கருதி பாசப் பிணைப்புகளில் கட்டுண்ட குடும்பங்கள் பல இருந்துள்ளன. ஒரே சமூகத்தில் வாழும் பலவிதமான குடும்பப் பின்னணிகளைக் கொண்டவர்கள் பேதத்தை மறந்து பிறர் குழந்தைகளையும் தங்களதுவென பாசமூட்டி வளர்த்த மனிதர்கள் இன்று இல்லை. ஆனால், எனக்கும் அப்படிப்பட்ட ஒரு சமூகம் கிடைத்ததற்கு நான் நன்றி கடன் பட்டவனாகவே இன்றுவரை என்னைக் கருதி வருகிறேன்.

இவ்வளவும் என் மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய அச்சமூகத்துக்கு நான் என்ன செய்தேன் தெரியுமா? 5 வயதில் குவார்ட்டர்ஸ் தெருதான் என் குழந்தைத் தனமான தினவுகளுக்கு தீனி தேடும் புல்வெளி. குவார்ட்டர்ஸ்சில் வசிக்கும் அண்டை வீட்டார்களின் இல்லம்தான் என் பரிசோதனைக் கூடம். நான் வீட்டை விட்டு வெளியேறினால் அந்த குவார்டர்ஸ்சில் உள்ளவர்களுக்கு தலைவலி ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம். நான் பார்ப்பவர்களையெல்லாம் 'சூத்து'!!.. 'சூத்து'!! என்று திட்டிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிடுவேன் என்று என் அம்மா அடிக்கடி கூறுவார்கள். யாரிடமிருந்து தொத்திக் கொண்டதோ தெரியவில்லை, ஆனால் ஆசைத்தீர இந்த 'சூத்து' என்ற வார்த்தையை பலமுறை பிறரைத் திட்டுவதற்கென்றே 5 வயதில் உபயோகித்திருக்கிறேன் என்று மட்டும் தெரிகிறது.

இந்த வார்த்தைக்கடுத்து நான் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை 'டிக்கோ'. அப்படியென்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் சதா இந்த நாமத்தையே நான் உச்சரித்துகொண்டிருப்பேன் என்று என் சின்னம்மா கூறுவார்கள். என் தாய்மாமாவைச் சந்திக்கவரும் அவரின் நண்பர்கள் நான் டிக்கோ.. டிக்கோ என்று உச்சரித்துக் கொண்டிருப்பதைக் கண்டு, இன்றுமுதல் என்னை அனைவரும் 'டிக்கோ' என்று அழைக்கக் கடவது என்று வாழ்த்திவிட்டுச் சென்று விட்டனர். 'டிக்கோ' என்ற புதிய அவதாரத்தோடு குவார்ட்டர்ஸ் தெருவில் நான் கால் வைக்க அண்டை வீடுகளில் ஏற்பட்டத் தலைவலி இரண்டு மடங்கானது! அப்படியொரு காரியத்தைச் செய்தேன்!

தொடரும்...

0 பேரு வெத்தல போட வந்தாங்க..:

Post a Comment

தமிழ்ல சொல்லணுமா, இங்க தட்டுங்க.. தமிழ் தட்டசுவான், வந்து வெத்தல போட்டதுக்கு நன்றி.. :)

என்னைப் பற்றி..

My photo
அதான் தெரியிலிங்க..தேடிகிட்டு இருக்கேன்,கண்டுபுடிச்சேனா கண்டிப்பா சொல்றேன் நான் யாருன்னு..

இப்ப மணி..

பதிவெண்


Template Brought by :

blogger templates