ஓடம்
காற்று பலமாக வீசத் தொடங்கிய சமயம் அது. சற்று நேரத்தில் இடியுடன் கூடிய மின்னல் வரவிருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அறிவழகன் மனம் ஒருநிலையில் இல்லை, சதா படபடத்துக் கொண்டிருந்தது. அவன் முகத்திலிருந்த மகிழ்ச்சியின் அறிகுறி மெல்ல மெல்ல மறைந்து அவநம்பிக்கையின் சாயல் குடிகொண்டது.
கப்பலுக்கு எந்நேரத்திலும் ஆபத்து வரலாம் என்று அறிந்து கொண்ட அவன் மனம் சற்று நேரம் பழைய நிகழ்வுகளை அசைப்போட்டு ஆறுதல் தேட எத்தனித்தது. தன் சட்டைப்பையில் பத்திரப்படுத்தி வைத்திருந்த ஐம்பது வெள்ளியை அறிவழகன் வெளியே எடுத்தான். அதில் பொறிக்கப்பட்டிருந்த மாமன்னரின் முகத்தைப் பார்த்தான். சற்று நேரத்தில் அம்முகம் தன் தந்தையின் முகமாக மாறியது. அறிவழகனின் உள்ளம் நெகிழ்ந்தது.
தந்தையிடம் சதா அடி வாங்கினாலும், சில சமயங்களில் அவர் தன் மீது பொழியும் பாசமும் அளவுக்கதிமான அக்கறையும் அறிவழகனை மெய்சிலிர்க்க வைத்திருந்தன. அந்நேரம் நோட்டில் ஒரு மழைத்துளி பட்டு வழிய அறிவழகன் சுயநினைவிற்குத் திரும்பினான். மழைத்துளியைத் துடைத்துவிட்டு சவாலைச் சமாளிக்க முடிவு செய்தான்.
இருண்ட மேகங்கள் அறிவழகனைப் பார்த்து முறைத்தன. அடுத்த நொடி கண்ணுக்கெட்டிய தூரம் வரை மழை பொழிந்துத் தள்ளியது. மின்னல்கள் தங்களுக்குள் சராமாரியாக வெட்டிக் கொண்டன. அதன் ரேகைகள் மேகங்களில் படர்ந்து கோர தாண்டவம் ஆடின. அறிவழகன் இச்சூழ்நிலைகளை கண்டவாறே சற்றும் மனந்தளராது தனது ஓடத்தைச் செலுத்தினான்.
எந்நேரத்திலும் ஓடம் நிலைத்தடுமாறி சாயலாம் என்ற நிலையில் அறிவழகன் தன் கவனத்தை ஒருநிலைப்படுத்தினான். ஓடத்தைக் காப்பாற்றுவதற்கு பிரம்ம பிரயத்தனம் எடுத்துக் கொண்ட அறிவழகனுக்கு ஓர் அடி விழுந்தது. ஓடத்தின் துடுப்பு வெள்ளத்தில் தூக்கி எறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரு பேரிடி முழக்கம் அப்பிராந்தியத்தை கலங்கடித்தது.
திடீரென்று மற்றொரு பேரிடியில் அதிர்ச்சியடைந்த அறிவழகன் நிலைத்தடுமாறி கிழே விழுந்தான். இடி, புயல் தன் சப்தங்களை ஒடுக்கிக் கொண்டன. இப்பொழுது அவன் காதுகளில் 'ங்கொய்...' என்ற ஒலி மட்டும் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்தது.
யாரோ தன் சட்டையைப் பிடித்து தூக்கி நிறுத்துவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தான் அறிவழகன்.
"டேய், எங்கடா நான் கொடுத்த ஐம்பது வெள்ளி..!" கோபக் கணலில் அறிவழகனின் தந்தை சந்திரன் கேட்டார்.
"இல்லப்பா... அது வந்து... வந்து..." என்று இழுத்தவன் சற்றும் எதிர்பாராத வேளையில் தந்தையின் பிடியிலிருந்து நழுவி ஓட்டம் எடுத்தான்.
சந்திரன் வீட்டு முன்புறம் ஓடிக் கொண்டிருக்கும் சாக்கடையை எட்டிப் பார்த்தார்.
ஐம்பது வெள்ளி நோட்டு காகித ஓட ரூபத்தில் பரிதாபமாக மூழ்கிக் கொண்டிருந்தது.
"ஏண்டி, இங்க வந்து பாரு ! உன் அருமை மவன் தீபாவளிக்கு கொடுத்த அங் பாவ் பணத்த அல்லூருலே உட்டுட்டான்..!"
12:20 PM
|
வகை:
சிறுகதை
|
என்னைப் பற்றி..
- சித்தன்
- அதான் தெரியிலிங்க..தேடிகிட்டு இருக்கேன்,கண்டுபுடிச்சேனா கண்டிப்பா சொல்றேன் நான் யாருன்னு..
என்னுடைய மற்றுமொரு உலகம்
-
இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா 201212 years ago
3 பேரு வெத்தல போட வந்தாங்க..:
:)) கதையில் சுவாரசியம் ஊட்ட முயற்சித்திருக்கிறீர்கள்... மிக சிறப்பு வாழ்த்துக்கள்...
நன்றி விக்னேஷ்வரன் :)
சித்தன் அவர்களுக்கு வணக்கம். தங்களுடைய படைப்புகளைப் படித்தேன்.
உரைநடையும், அலங்கரிப்புச் சொற்களும் மிகவும் பொருத்தமாகவே கையாண்டு உள்ளீர்கள். படிக்கும் போது, என் எண்ணங்கள் கதையின் சூழலுக்கே அழைத்துச் சென்றுவிடுகிறது.
தங்களுக்கு என் வாழத்துக்கள்.
'அந்த' சித்தன் போக்கு சிவன் போக்கு -
'இந்த' சித்தன் போக்கு கதையை நோக்கு.
விடைப்பெறுகிறேன்.
Post a Comment
தமிழ்ல சொல்லணுமா, இங்க தட்டுங்க.. தமிழ் தட்டசுவான், வந்து வெத்தல போட்டதுக்கு நன்றி.. :)