ஐயம்



"ஏன் ராசாத்தி, இன்னிக்கு ஒருமாறி இருக்கே.. உடம்பு சரியில்லியா..?"

"இல்லக்கா... மனசு சரி இல்ல.."

"ஏண்டி?"

"பிள்ளைங்கல டியூஷன்லேர்ந்து கூட்டிட்டு வரப்போனவரு, இன்னும் திரும்பி வரலியே..."

"பிள்ளைங்கல கூட்டிட்டு ஏதாவது சாமான் வாங்க போயிருக்கும்.. இல்ல, மூணு தெரு தள்ளி ஒரு வீட்டுல சாவு, துக்கம் விசாரிக்க போயிருக்கும்.."

"இல்லக்கா, எங்க போனாலும் சீக்கிரமா வீட்டுக்கு வந்துருவாரு.. ரெண்டு மணிநேரமாச்சி அவர் போயி.."

ராசாத்தியின் கைகளும் கால்களும் லேசாக நடுங்க ஆரம்பித்திருந்தன. அவளுடைய இருதயம் இயல்புநிலையைக் கடந்து வேகமாக படபடக்கத் தொடங்கியிருந்தது. ஒன்றும் செய்வதறியாது வீட்டின் சன்னலோரமாக வந்து வெளியே எட்டிப் பார்த்தவளுக்கு சங்கடமாக இருந்தது.

"அக்கா, இன்னிக்கு தெருவே இவ்வளோ அமைதியா இருக்கு.. சாயங்கால நேரம் பிள்ளைங்க எல்லாம் வெளியேதானே ஆட்டம் போட்டுகிட்டு இருக்குங்க.. இன்னிக்கு ஒரு ஈ, காக்காயே காணொமே...?"

"ஓ.. ஆமாவா.." என்றபடியே வரவேற்பறை நாற்காலியில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள், ராசாத்தியின் அண்ணி.

"எதிர்வீட்டு வாசுவையும் காணோம், இருந்திருந்தானா, அவன விட்டு அவர தேட சொல்லிருப்பேன்.. உதவிக்கு ஒருத்தரையும் காணோமே..." என்றவள் கவலையோடு சன்னலோரமாகச் சாய்ந்தாள். சன்னலோரமாக மாட்டப்பட்டிருந்த தமிழ் நாள்காட்டியை ஒரு முறைப் பார்த்தாள். நேற்றைய தேதி இன்னும் கிழிக்கப்படாமல் இருந்தது. உடனே அவள் கை நாள்காட்டியின் நேற்றைய தேதியைக் கிழித்தது. கண்கள் அன்றைய ராசிப் பலனை உற்று நோக்கியது. அவளுடைய கடக ராசிக்கு 'ஐயம்' என்று பக்கத்தில் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு,

"சரியாத்தான் போட்டுருக்காங்க.." என்று மனதில் பயம் கலந்த சந்தேகத்தோடு கிழித்து வைத்திருந்த நாள்காட்டித் தாளை கையில் உருட்டிக் கொண்டே பார்வையை சன்னல் வெளியே மேய விட்டிருந்தாள் ராசாத்தி.

அப்போது தொலைப்பேசி மணி அலறியது.

ஒரே எட்டில் தொலைப்பேசியைப் பற்றினாள் ராசாத்தி,

"ஹலோ யாரு..?"

அவள் குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது.

"ராசாத்தி, நான்தான் பேசுறேன்..!"

கணவனின் குரல் கேட்டதும், ராசாத்திக்கு போன உயிர் திரும்பி வந்ததுபோல் இருந்தது.

"என்னங்க, எங்க இருக்கீங்க... பிள்ளைங்க எங்க...?"

என்று கேள்விகளை அடுக்கினாள்.

"நான் சொல்றத கவனமா கேளு ராசாத்தி !, பிள்ளைங்க பத்திரமா என்கூடதான் இருக்குதுங்க.. நம்ப கம்பத்துல ஒரே கலவரமா இருக்கு, மலாய்க்காரனுங்க தமிழனுங்கள பாக்குற இடத்துலலாம் வெட்டுறானுங்க.. நம்ம எதிர்வீட்டு வாசுவையும் வெட்டிடானுங்க.. நீ வீட்டு கதவ, சன்னல எல்லாம் சாத்திக்கே.. வெளியே எங்கையும் போகவேணாம். நான் பிள்ளைங்கல என் அம்மா வீட்டுல உட்டுட்டு பொறவு உன்னையும் அக்காவையும் வந்து கூட்டிக்கிறேன்.. சரியா...!" என்று ராசய்யா கூற,

"ஆங்.. சரிங்க... பிள்ளைங்க பத்திரம்..!" என்று கனத்த குரலோடு கூறிவிட்டு, தொலைப்பேசியைத் துண்டித்தாள்.

"ஐயோ கடவுளே, என்னப்பா இது சோதனை..!" என்றவள் படபடப்புடன் ஓடிச் சென்று வீட்டுக் கதவை சாத்தினாள்.

"ஏய், ஏண்டி.. என்ன ஆச்சி..?" என்று சரோஜா ஒன்றும் அறியாதவளாய் கேட்க,

"அண்ணி, டீ.வியே அடைச்சிட்டு, பின்னாடி குசினி கதவையும் அடைங்க சீக்கிரம்...!!" என்று கூறிக்கொண்டே வீட்டின் முன்புற சன்னலையும் ஓங்கி அறைந்தாள்.

சன்னல் அறைந்த வேகத்தில் சுவரில் மாட்டப்பட்டிருந்த நாள்காட்டி கீழே விழுந்தது. ராசாத்தி அதனை சட்டைச்செய்யாமல் குசினி பக்கம் வேகமாக ஓடினாள்.

கீழே கிடந்த நாள்காட்டி, 04 மார்ச் 2002 என்று அன்றையத் தேதியைப் பரிதாபமாய்க் காட்டிக் கொண்டிருந்தது.


பி.கு : 04 மார்ச் 2002 (பெட்டாலிங் ஜெயாவிலுள்ள, கம்போங் மேடான் எனுமிடத்தில் மலாய்காரர்களுக்கும் தமிழர்களுக்கும் இனக்கலவரம் மூண்டது. நான்கு நாட்கள் தொடர்ந்து நடைப்பெற்ற இக்கலவரத்தில் 6 பேர் மாண்டனர். நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் வெட்டுக் குத்து காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இக்கலவரத்தில் உயிரிழந்தவர்களிலும், காயமடைந்தவர்களிலும் தமிழர்களே அதிகம்.)

0 பேரு வெத்தல போட வந்தாங்க..:

Post a Comment

தமிழ்ல சொல்லணுமா, இங்க தட்டுங்க.. தமிழ் தட்டசுவான், வந்து வெத்தல போட்டதுக்கு நன்றி.. :)

என்னைப் பற்றி..

My photo
அதான் தெரியிலிங்க..தேடிகிட்டு இருக்கேன்,கண்டுபுடிச்சேனா கண்டிப்பா சொல்றேன் நான் யாருன்னு..

இப்ப மணி..

பதிவெண்


Template Brought by :

blogger templates