விடியற்காலை மணி மூன்றரை இருக்கும். தன் வீட்டைச் சுற்றி சில சலசலப்பு, மனிதர்களின் மெல்லிய பேச்சுக் குரல்கள், அந்நேரத்தில் குடிகொண்டிருந்த அமைதியை கிழித்துக்கொண்டு வேலுவின் காதுகளில் வந்து விழுந்தன.
அன்றிரவு அவன் உறங்கவில்லை. தனக்கு எந்நேரமும் ஆபத்து என்றறிந்திருந்தவன் முன் ஜாக்கிரதையாக, சில துணி மணிகளை அவசர அவசரமாக மூட்டைக் கட்டிக் கொண்டிருந்தான். அவன் தங்கியிருந்த பலகை வீட்டில் ஆங்காங்கே சிறு சிறு ஓட்டைகள் இருந்ததால், அன்று அவை அவனுக்கு தொலைநோக்கிக் கருவிகளாக செயல்பட்டுக் கொண்டிருந்தன. அடிக்கடி ஓட்டைகளின் வழி வெளியே ஏதேனும் நடமாட்டம் தெரிகிறதா என்று கவனித்துக் கொண்டான். அவனுடைய காதுகள் இரண்டும் ராடாரைப்போல் சுற்றி முற்றி ஏற்படும் சலனங்களைப் பதிவு செய்து அவனது மூளைக்கு அனுப்பிக் கொண்டிருந்தன.
காரியத்தின் மும்முரத்தில் இருந்த அவ்வேளையில்தான், அவன் சந்தேகிக்கும்படியான சில சலனங்களை அவனுடைய மூளை பதிவு செய்திருந்தது. வேலு சந்தடி இல்லாமல் நகர்ந்து ஓர் ஓட்டையின்வழி வெளியே உற்று நோக்கினான். காரிருளில் ஏதும் கண்களுக்குப் புலப்படவில்லை, ஆனால் தொடர்ச்சியாக காலடிச் சத்தமும், காய்ந்த இலைகள் ஒடியும் சத்தங்களும் ஒருங்கே கேட்டுக் கொண்டிருந்தன. சில வினாடிகள் உற்று நோக்கிக் கொண்டிருந்த அவனுடைய விழிப்படலங்கள் சுருங்கி, காரிருளைக் கிழித்து எதிரே ரப்பர் தோட்ட மரங்களெல்லாம் பேயாடுவதைப் போல அவனுக்குக் காட்டிக் கொண்டிருந்தது.
பேயாடும் மரங்களுக்கு மத்தியில் சில உருவங்கள் அங்கும் இங்குமாக நிழலாடுவதை வேலுவின் விழிப்படலங்கள் பதிவு செய்தன. அவ்வேளையில் வேலுவின் உடல் முழுவதும் ரோமாஞ்சனம் கண்டிருந்தது. மேலும் உற்று நோக்க எத்தனித்த வேளையில், திடீரென்று அவன் கண்ணெதிரே கரிய உருவம் ஒன்று கடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். இனியும் இங்கிருப்பது உசிதமல்ல என்றெண்ணியவன் துணி மூட்டையை எடுத்துக் கொண்டு சந்தடி இல்லாமல் வீட்டின் பின்புறத்தை நோக்கி நடந்தான். சமையல் கட்டை அடைந்ததும் கொல்லைக் கதவை திறக்க முற்பட்டான். கொல்லைக் கதவின் தாழ்பாள் கறைப்பிடித்துப் போயிருப்பதால் சற்று பலம் கொண்டுதான் அதனைத் திறந்தாக வேண்டும். வேகமாக திறந்தாலோ சத்தம் பலமாகக் கேட்கும் என்பதால், மெதுவாக தாழ்பாளை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான் வேலு. அதற்குள் வீட்டின் முன்புறம் யாரோ தாழ்பாளை வேகமாக இழுக்கும் சத்தம் கேட்டது.
ஆபத்து தன் வீட்டு முச்சந்தியில் நின்றுக் கொண்டு கதவைப் பதம் பார்க்கத் தொடங்கியிருப்பதைக் கண்டு, இனியும் தாமதித்தால் தன் உயிருக்கே பங்கம் வந்துவிடும் என எண்ணி, தாழ்பாளைப் பிடித்து வேகமாக இழுத்தான் வேலு. கறைப்பிடித்த தாழ்பாள் படாரென திறந்ததும் ஒரே எட்டில் வேலு வெளியே பாய்ந்து ஒட்டமெடுத்தான். சில வினாடிகளில் வேலுவின் உருவம் ரப்பர் மரக் காடுகளுக்கிடையில் மறைந்தது. காரிருள் சூழ்ந்த அந்த ரப்பர் மரக்காட்டில் நுழைந்து ஓடிய வேலுவுக்கு, அவன் கால்தடம் பட்டு முறிகின்ற சருகுகளின் சத்தமானது, பின்னால் யாரோ தொடர்ந்து வருவதுபோல் ஒரு மாயையை அவனுக்கு ஏற்படுத்தியது. அதோடு நொய்வமரக் கானக இருளில் அவனுடைய பார்வையும் தடைப்பட்டதால், அவனால் தொடர்ந்து வேகமாக ஓடமுடியவில்லை.
மெதுவோட்டத்திலிருந்து வேகநடைக்கு மாறி பின் மெதுநடைக்கு மாறினான் வேலு. கண்களைக் கழுகுப் பார்வையாக்கிக் கொண்டு நடந்த வேலு, ஒரு கணம் தான் வந்தப் பாதையை பின்நோக்கியதும் அவனை அறியாமலேயே அவன் கால்கள் நின்றன. தூரத்திலிருந்து வேலுவின் பலகை வீடு நன்றாகத் தெரிந்தது. வீட்டைச் சுற்றி சிலரின் நடமாட்டம் தெரிந்தது. வீட்டைச் சுற்றி வெளிச்சம் மிகப் பிரகாசமாக இருந்தது. நாளைந்து பேர் வீட்டின் பின்புறத்தில் நீரை வாரி வீட்டின் மீது ஊற்றுவதுபோல் தெரிந்தது.
“என்ன செய்கிறார்கள் இவர்கள்? ஒருவேளை….. ஆஹா..!”
வேலு பார்வையைக் கூர்மைப்படுத்திக் கொண்டு நடப்பவற்றைக் கவனிக்கலானான்..
சற்று நேரத்தில் எங்கிருந்தோ ஒருவன் கையில் தீப்பந்தத்தை கொண்டு வந்தான்.
“ஆஹா.. சண்டாளர்கள் வீட்டைக் கொளுத்துவதற்கா வந்தார்கள், பாவிகளா..!” என்று எண்ணியவனுக்கு அடுத்து நடந்தக் காட்சி சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது. தீப்பந்தம் வீட்டுக் கூரையின் மேல் பறந்து வந்து விழுந்தது. அடுத்த வினாடியே அக்கினி தன் சுடுநாக்குகளைக் கொண்டு வீட்டைத் தீண்டத் தொடங்கியது. சற்று நேரத்தில் அப்பிராந்தியமே வெளிச்சத்திற்குள்ளானது. வேலு நின்றுக் கொண்டிருந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்தை உள்வாங்கிக் கொண்டு, எதிரிகளின் பார்வை அவன் மீது விழும்படி காட்டிக் கொடுத்து விட்டது. வெளிச்சத்தில் ஆங்காங்கே நிழலாடிய ரப்பர் மரங்கள் அவனைப் பார்த்துப் பேய் சிரிப்பு சிரிப்பதாக உணர்ந்தான் வேலு. ஓட்டம் மீண்டும் தொடர்ந்தது.
______________________________________________________________
நன்றாக விடிந்து விட்ட வேளை. பிரதான செம்மண் சாலையில் பலர் சைக்கிளில் வேலைக்குச் சென்றுக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் கையில் காண்டா கம்புகளைத் தாங்கிக் கொண்டு தன் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருந்தனர். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளில் சிலர் அரைத் தூக்கத்துடன் தன் பெற்றோர்களின் கைகளைப் பற்றிக் கொண்டும், ஒரு சில குழந்தைகள் கூட்டம் கூட்டமாகக் கதையடித்துக் கொண்டும் சென்றுக் கொண்டிருந்தனர். காலைச் செங்கதிரவனின் வர்ணம் செம்மண்சாலையின் வர்ணத்தோடு ஒன்றியிருந்த அந்த ரம்மியமான வேளையில், சிலர் கும்பல் கும்பலாக ஏதொ ஒரு விஷயத்தைப் பற்றி மும்முரமாகப் பேசிக் கொண்டே நடந்ததுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அப்படி என்னதான் பேசிக் கொள்கிறார்கள்?
“ஏன்யா? போலீசுக்கு சொல்லியாச்சா..?”
“அதான் தெரியில சாமி.. என்ன கேட்டா இந்த விஷயத்த மூடி மறச்சி வெச்சிறது நல்லதுன்னு படுது.. என்ன சொல்றே..?”
“நீ, சொல்றதும் சரிதான்.. போலீஸ் அது இதுன்னு போயி, அந்த பொட்ட புள்ள மானமும் போயிறக்கூடாதுல.. கண்ணாலம் பண்ணிக்கிற வயசு வேற, ஆனா ஏன்யா, அவன புடிச்சி இந்த புள்ளக்கி கட்டி வெச்சாதான் என்ன..?”
“ஹூம்.. கிழிஞ்சது போ..! இவனுக்குலாம் கண்ணாலம் பண்ணா என்னாத்துக்கு ஆவுறது அந்த பிள்ள கதி.. பேசாமே அவன போட்டுத் தள்ளுறதுதான் சரி வருங்குறேன்.. நேத்தே மாட்டி இருந்தான், சங்குதான்..”
“எங்கே ஓடிபோனானே தெரியலியே?”
“ம்ம்… அந்த பிள்ளையோட அப்பன், மாமங்காரன், சொந்தக்காரன் எல்லாம் தேடிக்கிட்டுதான் இருக்கானுங்க.. அவனே எங்க பாத்தாலும் அங்கையே..” சொல்லிமுடிப்பதற்குள் எதிரே ஒரு இராணுவ வண்டி ஒன்று வருவதைக் கண்டு சாமியும், கருப்பனும் பேச்சை நிறுத்தினார்கள். இராணுவ வண்டி இவர்களைக் கடக்கும் வரை கையைக் கட்டிக் கொண்டு நின்றார்கள். இதே பாவனைதான் அந்த செம்மண் சாலையில் பயணித்தவர்கள் அனைவரிடமும் அப்பொழுது காணப்பட்டது. இராணுவ வண்டி மறைந்ததும் செம்மண் சாலைக்கு மீண்டும் உயிர்ப்பு வந்தது.
____________________________________________________________
கொசுக்கடியில் வெகுநேரமாக புதர்களுக்கு மத்தியில் மறைந்திருந்த வேலு, பல்லைக் கடித்து கொண்டு தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தான். உயிரைக் காப்பாற்றியாக வேண்டும் என்றால் பொறுத்துதான் ஆக வேண்டும் என்று மனதில் எண்ணியவாறே எதற்கோ காத்திருப்பவன்போல் காணப்பட்டான் வேலு. அவன் மறைந்திருந்த புதரிலிருந்து ஓர் எட்டடி தூரத்தில் இருப்புப் பாதை ஒன்று காணப்பட்டது. புதரில் மறைந்துக் கொண்டே சற்று தொலைவில் உள்ள இரயில்வே நிலையத்தை அவன் கண்கள் நோட்டமிட்டுக் கொண்டிருந்தன. இரயில்வே நிலைய அதிகாரி கொடிகளுடன் வெளியே காத்துக் கொண்டிருப்பதைக் கண்டு வேலுவின் மனதிற்குள் சுதந்திரப் பட்டாம்பூச்சி சிறகடிக்கத் தொடங்கி விட்டிருந்தன. அவ்வேளையில் அவன் உடம்பில் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்த மலேரியா கொசுக்களைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை. முடிந்த மட்டும் பொங்கியெழும் ஆனந்தத்தை மனதிற்குள் அடக்கி வைத்துக் கொண்டு, கொசுக்கடியின் வலியையும் தாங்கிக் கொண்டு புதரில் மௌன யாகம் நடத்திக் கொண்டிருந்தான் வேலு. ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்த அவன் உள்ளம் சற்று நேரம் கடந்த கால நினைவலைகளில் மூழ்கடிக்கப்பட்டு, நேற்றிரவு நடந்த சம்பவங்கள் கண்முன் நிழலாடத் தொடங்கின.
16 வயதுதான் இருக்கும் கன்னியம்மாளுக்கு. என்ன ஒரு பருவ மாற்றம் அவளுக்குள்? சே..! அவளை ஏன் நான் பார்க்க வேண்டும்.. ? சிறுவயதில் பழகிய நாட்களின் சுகங்களையெல்லாம் சேர்த்து வைத்து, பருவமடைந்ததும் ஒரு நொடிப் பார்வையில் அத்தனையையும் அள்ளி கொடுத்து என்னைக் கெடுத்து விட்டாளே. நானா அவள் பின்னால் அலைந்தேன்? இவள்தானே என் பின்னால் வந்தாள். என்னிடம் காதல் என்றாள், அவள் குடும்பத்திற்குத் தெரிந்தால் மோதல் என்றேன், அவளோ சாதல் என்று முடிவெடுத்தால், நாம் இருவரும் வாழ்தல் அன்றோ முக்கியம் என்று அவளைக் கட்டிப் பிடித்து களவு புரிந்தேன். இதனைப் பார்த்து தொலைத்துவிட்ட அவன் மாமன்காரன் காட்டிக் கொடுத்ததனாலல்லவோ இவ்வளவு பிரச்சனை. அதுகூட எனக்கு கவலை இல்லை. களவுப் புரிதலைக் கண்டுவிட்ட மாமன்காரனை அவள் கண்டுவிட்டதும், துள்ளியெழுந்து புழுவாய் துடித்தாளே..! நான் அவளைக் கெடுத்துவிட்டதாய் அவள் மாமனைக் கட்டிப் பிடித்து அழுதாளே..! சே..! தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள என் உயிரை விலையாய் பேசிவிட்டாளே இந்த கிராதகி..! உடல் தீண்டி வியர்வையால் கலந்த தேகம், ஈரம் காய்வதற்குள் மனம் மாறி வேஷத்தைக் கலைத்தாளே காமாந்தகி..! ஹூஹும்.. இல்லை.. இல்லை.. ஒருவேளை பயத்தினால் அவள் அரங்கேற்றிய நாடகமோ..? என்னடா இது.. இவள் என்னை ஏமாற்றியபோதும் மனம் இவள் பின்னாலேயே செல்கிறதே..!
காதல் வலியையும், காமச் சுகத்தையும், வஞ்சிக்கப்பட்ட வேதனையையும் ஒரே நாளில் அனுபவித்து, இப்பொழுது மரண வாயிலில் தன் எதிர்காலத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கத் துடிக்கும் எமகாதர்களிடம் சிக்கிக் கொண்டு தவிக்கும் வேலுவின் மனநிலையை மலேரியாக் கொசுக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவை போட்ட ஊசிகளில் வேலுவின் உடலும் உள்ளமும் அப்பொழுது மறுத்துப் போயிருந்தன.
அதோ.. ரயிலின் ஹூங்காரம் கேட்கிறது. வேலு இறந்தகால நிகழ்வுகளின் சிந்தனைகளிலிருந்து மீண்டு வந்தான். ரயில் நிலைய அதிகாரி சிவப்பு நிற கொடியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதையும், தூரத்தே ரயில் ஒன்று ஊர்ந்து வருவதையும் கண்டான். சற்று நேரத்தில் ஆட்களை ஏற்றிக் கொண்டு ரயில் இவ்வழியாக வரும்பொழுது பாய்ந்து ஏறிவிட வேண்டியதுதான் என்று மனதிற்குள் தீர்மானித்தான் வேலு.
ரயில் நின்றது. பயணிகள் வரிசையாக மூட்டை முடிச்சுகளோடு ரயிலில் ஏறிக் கொண்டிருந்தார்கள். பயணிகள் ரயிலில் ஏறுவதை சில இராணுவ அதிகாரிகள் நோட்டமிட்டுக் கொண்டிருந்ததும், சிலருக்கு கட்டளை இட்டுக் கொண்டிருந்ததும் வேலுவின் கண்களுக்குத் தெரிந்தது. இவர்களையெல்லாம் வேறெங்கோ வேலைக்குக் கொண்டுச் செல்கிறார்களா என்ன.. ம்ம்.. நல்லவேளை, இந்த ரயிலில் உள்ளவர்களிடம் யாரிடமாவது சிநேகம் வைத்துக் கொண்டு தனக்கும் ஒரு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டான் வேலு. 10 நிமிடங்கள் கழித்து ரயில் நிலைய அதிகாரி பச்சைக் கொடி காட்ட இரயில் புறப்பட்டது. காட்டப்பட்ட கொடி தன் வாழ்க்கையின் அடுத்தக் கட்ட அத்தியாயத்திற்குக் காட்டப்படும் பச்சைக் கொடி என எண்ணிக்கொண்டான் வேலு.
ரயில் மெதுவாக நகர்ந்துக் கொண்டே ஒரு முறை ஹுங்காரம் செய்தது. குறைந்தது இரண்டு நிமிடங்களுக்குள் அவன் இருக்கும் இடத்தை இரயில் கடக்கும், இத்தருணத்தை தப்பவிட்டால் வேறெங்கும் தப்ப முடியாது. வேலுவும் இரயிலினுள் பாய்வதற்கு தன் துணி மூட்டையுடன் தயாரானான். இதோ, ரயிலும் அவனை நெருங்கி விட்டது. வேலு எழுவதற்கு முயற்சி செய்தான், ஆனால் ஏதோ சில மனிதக் குரல்கள் கேட்கின்றனவே. வேலு பின்னால் திரும்பிப் பார்த்தான்.
“ஆஹா.. இது என்ன கொடுமை..!” நம்மை இன்று துரத்தி வந்த அதே கூட்டம்..!”
வேலு மறைந்திருந்த புதரிலிருந்து 50 மீட்டர் தூரத்தில், அவனைத் துரத்தி வந்த கும்பல் நின்றுக் கொண்டிருந்தது. கண்ணியம்மாவின் அப்பன், மாமன், மச்சான் என சில உறவுக்கார கூட்டம் அங்கு நின்றுக் கொண்டு ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். கையில் ‘பாராங்’ கத்தியோடு காணப்பட்ட அவர்கள் நிச்சயம் அவனைத் தேடித்தான் அங்கு வந்திருக்க வேண்டும்.
“ரயில் நிலையத்தில் இராணுவம் இருந்ததால் அங்கு அவர்கள் செல்லாமல், ஒருவேளை இந்த ரயிலில் என்னைத் தேட முயலுகிறார்களோ..? ஐயோ, காரியம் கைகூடும் நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே, நான் புதரிலிருந்து எழுந்தால் என் தலை மண்ணில் உருளுமே.. கடவுளே..!”
இதோ, ரயிலும் இப்பொழுது வேலு மறைந்து நிற்கும் இடத்தைக் கடக்கின்றது.
“ஓடிச் சென்று ரயிலில் ஏறிவிடலாமா? கடைசிப் பெட்டி வரும்வரை காத்திருந்து அதில் ஓடிச் சென்று ஏறி விட்டால்..? அவர்களால் என்னைப் பின்தொடர முடியுமா..? ஒருவேளை அவர்களும் ரயிலைப் பிடித்து விட்டால்..? ஐயோ எனக்கு ஒன்றும் புரியவில்லையே”
வேலு கையைப் பிசைந்தவாறே ரயிலின் கடைசிப் பெட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன நடந்தாலும் சரி, கடைசிப் பெட்டியில் ஏறிவிடவேண்டியதுதான்..” என்று மனதில் ஒருவாறு தீர்மானித்தவனாய், பாய்வதற்குத் தயாரானான் வேலு.
இதோ, கடைசிப் பெட்டி அவனைக் கடக்கிறது.
எழத் தயாரான வேலு சற்றும் எதிர்ப்பார்க்காத நேரத்தில், வேலுவைத் துரத்தி வந்த கும்பல் ரயிலின் கடைசிப் பெட்டியில் பாய்ந்து ஏறினார்கள்.
“நாசமா போச்சு..! என் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார்களே, இனி உயிரோடு இங்கிருந்து தப்பிக்க அடுத்த ரயில் இரவு 11.30 மணிக்குதானே வரும்..! சே..!”
ரயில் அங்கிருந்து மறைந்ததும், வேலு புதரிலிருந்து எழுந்தான். உடம்பெல்லாம் ரணம். நடக்கக் எத்தனித்தவேளை வேலுவின் கால்கள் மறுத்து விட்டன.
“ஐயோ, கடவுளே..! நல்லவேளை நான் எழுந்து ஓடவில்லை. கால்கள் மறுத்துப்போய் அல்லவா இருக்கும், அவர்களும் என்னை வெட்டிவிட்டல்லவா வீட்டிற்குப் போயிருப்பார்கள்..!”
வேலு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு ரயில் நிலையத்தை நோக்கி நடக்கலானான். இரவு ரயிலை எப்பாடு பட்டாவது பிடித்து வேற்றூருக்குச் சென்றுவிட வேண்டும், அது வரையில் இங்கு மறைவான இடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தாக வேண்டும் என்று மனதில் பலவாறு சிந்தித்தபடியே ரயில் நிலையத்தை அடைந்தான். வேலுவைக் கண்ட ரயில் நிலைய அதிகாரி,
“என்னப்பா.. ரயில் ஏறவா வந்தே? இன்னிக்கு மெயில் இல்ல தெரியும்தானே..?”
வேலு ரயில் நிலைய அதிகாரியை ஆச்சரியத்தோடு பார்த்தான்.
“அண்ணே, இப்பதானே ஒரு மெயில் போனுச்சி, இந்த ஸ்டேஷன்ல கூட நின்னுச்சே..?”
“ஓ, அதுவா, அது சாதாரண பயணிங்க போற மெயில் இல்ல.. இது வேற..”
“வேறன்னா..?”
“இப்ப போன மெயிலு காஞ்சனாபுரிக்கு போகுது..! நம்ம ஸ்டேஷன் தான் கடைசி ஸ்டாப்பு, இதுக்குமேல வேற எங்கையும் நிக்காது, நேரா காஞ்சனாபுரிலதான் நிக்கும்..”
“காஞ்சனாபுரியா, இந்த இடத்து பேர நான் கேள்வி பட்டதில்லையே, எங்கண்ணே இருக்கு இந்த ஊரு..”
“சயாம்ல இருக்கு, இப்ப இந்த மெயில்ல போறவங்கலாம் சயாமுக்கு மரண தண்டவாளம் போடப் போற தொழிலாளிங்கப்பா..”
“மரண தண்டவாளமா?”
“ஹூம்.. அங்க தண்டவாளம் போடப்போறவங்க யாருமே உயிரோட திரும்பியது இல்ல, தெரியுமா.. இதுவரைக்கும் ஒரு லட்சம் பேரு செத்துபோயிருக்காங்க.. எல்லாம் இந்த ஜப்பான்காரனுங்க பண்ர வேல.”
“ரயில்லே உள்ளவங்க தப்பிச்சு போக முடியாதா அண்ணே..?”
“நடக்குற காரியமா அது, தலையே அறுத்துருவானுங்க.. கட்டையனுங்களப்பத்தி தெரியாதா, என்னையா நீ.. நிப்போன் பேர கேட்டா இருந்த இடத்துலேயே கழிஞ்சுறுவானுங்க.. அந்த ரயில்லே போற நம்மாளுங்கள நெனச்சாதான் எனக்கு கவலையா இருக்குது, பொண்டாட்டி குடும்பம், குழந்தை, குட்டின்னு இருந்தும் புடிச்சி இழுத்துட்டு போறானுங்க ” என்று கவலை தோய்ந்த முகத்துடன் கூறிவிட்டு ரயில் நிலைய அதிகாரி அங்கிருந்து நகர்ந்தார்.
ரயில் நிலைய அதிகாரி என்னவோ கவலையாக இவ்விஷயத்தை வேலுவிடம் கூறினாலும், வேலுவுக்கோ இவ்விஷயம் இனிப்பைத் தின்றதுபோல் தித்திப்பாய் இருந்தது. நின்ற இடத்திலேயே துள்ளிக் குதித்தான் வேலு.
“கடவுளே, மரணக் குழியிலே விழவேண்டிய என்னை காப்பத்திட்டே, இனிமே கன்னியம்மாளுக்கும் யாரும் இல்லே, இனிமே நான் தான் அவளுக்கு எல்லாமே..”
என்று மனதில் எண்ணியவாறே சந்தோஷத்தோடு தன் தோட்டத்தை நோக்கி ஓடினான் வேலு.
அங்கு அவனை வெட்டுவதற்கு வேறு யாரெல்லாம் காத்திருக்கிறார்களோ…???
சயாம் மரண ரயில்வே திட்டத்தில் ஆசியர்கள் சுமார் 180,000 பேர்களும், போர்க் கைதிகளான ஐரோப்பியர்கள் 16,000 பேர்களும் 1939-ஆம் ஆண்டிலிருந்து 1945-ஆம் ஆண்டுவரையில் உயிரிழந்துள்ளனர். இவ்வெண்ணிக்கையில் தமிழர்களின் எண்ணிக்கை 100,000 ஆகும்.
2 பேரு வெத்தல போட வந்தாங்க..:
1943 க்குப்போய் விட்டு வந்தேன்.
மெய்யாலுமா.. ரொம்ப சந்தோஷங்க.. :)
Post a Comment
தமிழ்ல சொல்லணுமா, இங்க தட்டுங்க.. தமிழ் தட்டசுவான், வந்து வெத்தல போட்டதுக்கு நன்றி.. :)