ஊசி!


நேரம் ஆக ஆக வேர்த்துக் கொட்டியிருந்தது சின்னையாவுக்கு. ஆள்நடமாட்டம் சற்றுக் குறைவாகவே அன்று காணப்பட்டது. ஆமாம், இதுப்போன்ற காரியங்களுக்கு மக்கள் கூட்டத்தை அதிகம் எதிர்ப்பார்க்க முடியுமா என்ன? ஐயோ, என்ன இது! சின்னையாவுக்கு கை கால்கள் உதறுகிறதே.. உடல் சற்று நடுங்குவதுபோல் தெரிகிறதே.. பொறுத்திருந்தவனுக்கு இனியும் அங்கு நிற்பதில் இஷ்டமில்லாததனால் அங்கிருந்து நடக்க எத்தனித்தவனுக்கு லேசாக மயக்கம் வேறு.

"எங்க போய் தொலஞ்சான் இவன்..?!" என்று பல்லைக் கடித்துக் கொண்டான்.

என்ன செய்வது..?

வேறு வழி தெரியவில்லை அவனுக்கு. அவனுக்கெதிரில் 'கோப்பி தியாம்' ஒன்று கண்ணில் பட, அங்கு சூடாக காபி அருந்தினால் மயக்கம் சற்றுக் குறையும் என்றெண்ணியவன் தள்ளாடியபடியே கடையை நோக்கி நடக்கலானான். கடையை நெருங்கி விட்ட வேளையில், அவனை நோக்கி யாரோ "இன்சேக், இன்சேக்!" என்று அழைக்க பின்னால் திரும்பிப் பார்த்தான் சின்னையா.

இரு சீன வாலிபப் பெண்கள் அவன் கண் முன்னே.

அவர்கள் இருவர் முகத்தில் புன்னகையையும் கைகளில் ஏதோ அறிக்கைகளையும் வைத்திருந்ததைக் கண்டு சின்னையா உள்ளுக்குள் சற்றுப் பதறினான்.

"நான்.. வந்து..." ஏதோ சொல்ல வந்தவனை அவ்விறு சீனத்திகளில் ஒருத்தி இடைமறித்து,

"ஐயா, நாங்கள் சீன புத்தச் சங்கத்திலிருந்து வந்திருக்கின்றோம். எங்கள் சங்கங்களின் வழி ஏழைகளுக்கு உடுத்த உடை, உண்ண உணவு போன்ற உதவிகளை பொதுமக்கள் கொடுக்கும் நன்கொடைகளை வைத்து செய்து வருகிறோம்."

சின்னைய்யா சட்டைப் பையில் கையைவிட்டு துழாவினான்.

மீண்டும் அதே சீனப் பெண்,

"ஐயா மன்னிக்கவும், நாங்கள் தங்களிடமிருந்து ஏதும் நன்கொடையை எதிர்ப்பார்க்கவில்லை."
என்றுக் கூறி அவள் சின்னையாவை புன்னகையோடு பார்த்தாள்.

"பிறகு உங்களிருவருக்கும் என்னதான் வேண்டும்?"

"ஐயா, இன்று எங்கள் சங்கத்தின் வருடாந்திர நிகழ்வாக நடைப்பெறும் இரத்த தான நிகழ்வு நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. உங்களுக்கே தெரியும், நம் நாட்டில் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. தற்போது பெருநாள் சமயம் வேறு. நீங்கள் இரத்தம் கொடுக்க முன்வந்தால், ஓருயிர் பிழைப்பதற்கு நீங்கள் காரணமாவீர்கள், தயவு செய்து நீங்கள்..."

சீனத்தி தொடர்ந்து பேசினாள். ஆனால், சின்னையாவின் காதில் அதற்குமேல் ஒன்றும் விளங்கவில்லை. விளங்கவில்லை என்பதைவிட விளங்கியும் விளங்காததுபோல் அவர்கள் கையில் கொடுத்த துண்டு அறிக்கையை வாங்கிக் கொண்டு நடக்கலானான். ஊசி என்றாலே அவனுக்கு அல்வா சாப்பிடுவதுபோல்.

உள்ளே நுழைந்தான், கிடைத்த இடத்தில் சாய்ந்தான், கைகள் இருக்கப்பட்டதில் நரம்புகள் புடைத்துக் கொண்டன..ஊசியை யாரோ ஒருவர் போட்டுவிட சற்று நேரத்தில் கனவு உலகம் அவனை ஆக்கிரமித்துக் கொண்டது.

அவன் நுழைந்தது சீன புத்தச் சங்கக் கட்டிடம் அல்ல. ஆளே இல்லாத ஒரு மாடிக்கடையின் அறை!

0 பேரு வெத்தல போட வந்தாங்க..:

Post a Comment

தமிழ்ல சொல்லணுமா, இங்க தட்டுங்க.. தமிழ் தட்டசுவான், வந்து வெத்தல போட்டதுக்கு நன்றி.. :)

என்னைப் பற்றி..

My photo
அதான் தெரியிலிங்க..தேடிகிட்டு இருக்கேன்,கண்டுபுடிச்சேனா கண்டிப்பா சொல்றேன் நான் யாருன்னு..

இப்ப மணி..

பதிவெண்


Template Brought by :

blogger templates