மதியம் 1 மணி என்பதைக் குறிப்பதற்கு சுவர்க்கடிகாரம் ஒரு முறை டாங்க்..! என்று அடித்து தன் கடமையைச் செய்ததில், ரூபனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. பயத்தில் சற்று அதிர்ந்ததில் அவன் கையில் இருந்த சில்வர் தட்டு கீழே விழப்போனச் சமயம், நல்லவேளையாக விக்கி தட்டை விழாமல் பிடித்து பெருமூச்சை விட்டான்.
"சை..! இது போட்டச் சத்ததுல பயந்தே போய்ட்டேன், நல்ல வேளை.." என மெல்லிய குரலில் ரகசியம் பேசுபவனைப் போல் ரூபன் விக்கியிடம் முனுமுனுத்தான்.
"டேய், விருவிருன்னுடா.. யாராச்சும் சத்தம் கேட்டு வந்துரப் போறாங்க..!" என்று ரூபனை அவசரப்படுத்தினான் விக்கி.
"டேய், நான் மட்டும்தான் எடுத்துகிட்டு இருக்கேன், நீ என்ன பண்றே? போ..! போயி அலமாரில எதாச்சும் இருக்கான்னு பாரு.." என்றான் ரூபன்.
விக்கி அலமாரியைத் திறந்து நோட்டமிட்டுக் கொண்டிருந்தான்.
"ரூபன்.. இங்க பாருடா, இதெல்லாம் எடுத்துக்கலாமா..?" என்று கேட்டுக் கொண்டே சில பளப்பளத்துக் கொண்டிருக்கும் பொருட்களை எடுத்துக் காட்டிக்கொண்டிருந்தவேளை, திடீரென்று அவர்கள் நின்றுக் கொண்டிருந்த அறையின் சன்னல் படார் என்று திறக்கப்பட்டது.
சத்தம் கேட்ட அதிர்ச்சியில் ரூபன் மீண்டும் கையிலிருந்த ஒருப் பானையை நழுவ விட்டான். இம்முறை விக்கியின் உதவி கிட்டவில்லை. அவன் கையிலோ நிறைய பொருட்கள் இடம்பிடித்துக் கொண்டிருந்தன.
பானை விழுந்த சத்தத்தில், மயான அமைதியில் உறங்கிக் கொண்டிருந்த அந்த வீடு முழித்துக் கொண்டதுபோல் ஓர் உணர்வு ஏற்பட்டது இருவருக்கும். பானைப் போட்ட சத்தம் ஓய்வதற்குள் அங்கிருந்து ஓடிவிட எத்தனித்த இருவரையும் நோக்கி ஒரு மெல்லிய குரல், "டேய் ஓடாதீங்கடா.. நில்லுங்கடா..! நான்தாண்டா அழகிரி..!" என்றது.
ஓட எத்தனித்த இருவரும் சன்னல் பக்கம் பார்க்கின்றனர்.
"அடப் பாவி, யேண்டா உனக்கு இந்த வேளை.. உன்ன என்னா பண்ண சொன்னேன்.. நாங்க மாட்டிக்கனும், நீ அப்படியே ஓடிரலான்னு பாக்குறியா?" என்று ரூபன் அழகிரியைக் கடிந்தான்.
"நான் வீட்ட சுத்தி முத்தி பாத்துகிட்டுதான் இருக்கேன், யாரும் இன்னும் வரல.. சீக்கிரம்.. சீக்கிரம்..!"
"சரி! நீ சன்னல மூடிட்டு வீட்டு முன்னுக்கு வந்து நாங்க கொடுக்குறத வாங்கிக்கே..! ரூபன் போதும்டா எடுத்தது, கிளம்பு..!"
அழகிரி கொண்டு வந்த சாக்குமூட்டையில் பலவித எவர் சில்வர் பாத்திரங்கள், பானை இன்னும் சில பொருட்களை மூட்டைக் கட்டிக் கொண்டு மூவரும் அங்கிருந்து காற்று வேகத்தில் மறைந்தார்கள்.
_________________________________________________________
"உமா ப்ளீஸ் அழாதேடா.. ப்ளீஸ்.." என்று தேம்பிக் கொண்டிருந்தவளை சமதானப்படுத்திக் கொண்டிருந்தாள் லலிதா.
அவர்களிருவரையும் கண்கொட்டாமல் நண்பர்களிருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
"யேன்லா, என்னதான் பிரச்சனை உங்க வீட்டுல..?" என்று கூட்டத்தில் ஒருவன் பஞ்சாயத்தை தொடங்கி வைத்தான்.
"தர்மா, உன் வாய கொஞ்சம் மூடுறியா.. ஏற்கனவே உமா பாவம், அது வீட்டுல பிரச்சனைன்னு அழுதுகிட்டு இருக்கு... அத கொஞ்சம் நேரம் நிம்மதியா உடுறீயா.." என்று தர்மாவின் வாயை அடைத்தாள்.
அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
"என்னடா இது, அவசரமா கூப்டீங்க.. இப்ப என்ன நடக்குதுன்னு யாரும் சொல்ல மாட்டுறீங்க.. இப்டின்னா நான் பேசாமே கிளம்புறேன்.." என்று எழுந்தான் தர்மா.
தர்மாவின் கையைப் பிடித்து நிறுத்தினான் வாசு. அவனைத் தனியாகக் கூட்டிச் சென்று நடந்ததை தர்மாவிடம் கூறினான். சற்று நேரத்தில் தர்மாவின் புருவங்கள் நெரிந்தன. உதடுகள் துடித்தன. கைவிரல்கள் தானாகவே இருக்கிக் கொண்டன.
"நீ இப்ப இவ்ளோ ஆத்திரப்பட்டு ஒன்னும் ஆகப்போறது இல்ல, நடக்கவேண்டியத பாப்போம்.." என்று தர்மாவை சமாதானப்படுத்த முயன்றான் வாசு.
"இல்லடா, அவங்களே...!"
"டேய், சொன்னா கேளு..!" அவங்கள நீ ஒன்னும் பண்ண முடியாது, பேசாமே என்கூட வா.." என்றவன் தர்மாவின் கையைப்பிடித்துக் கூட்டிச் சென்றான்.
கூட்டத்திற்குத் திரும்பியவனின் முகம் சிவந்திருப்பதை அனைவரும் கவனிக்கத் தவறில்லை.
உமா இன்னும் தேம்பிக் கொண்டிருந்தாள். தர்மா உமா அருகே சென்றான்.
" உமா, நாங்க இருக்கோம்ல, நீ ஏன் கவல படுற.. கண்ணே தொடச்சிக்கோ.."
"இல்ல தர்மா, என்னதான் இருந்தாலும் என் அப்பா என் கண் முன்னாடியே என் அம்மாவே அடிச்சிருக்கக்கூடாது.." என்றவள் மேலும் தேம்ப ஆரம்பித்துவிட்டாள்.
அதைவிட முக்கியப் பிரச்சனை ஒன்று இருக்கிறது. அதைச் சொல்ல கூச்சப்படுகிறாள் என்று தர்மாவிற்கு தெரிந்தே இருந்தது.
அச்சமயம் காய்ந்த இலைகள் ஒடியும் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டது. யாரோ வருகிறார்கள் என்பதற்கான அறிகுறி அது. புதர்கள் காடுமண்டிக் கிடந்த அவ்விடத்திலிருந்து மூவர் பிரசன்னமாகினர்.
"என்னடா விக்கி, ரூபன், அழகிரி.. எல்லாம் ஓகேவா?" என்றுக் கேட்டான் வாசு.
"ம்ம்..ஒகேதான், ஆனா இன்னும் சிலது குறையிது.. பொருட்களை கீழே கொட்டினான் அழகிரி. லலிதா ஒவ்வொன்றாய் சரிப்பார்த்துவிட்டு தர்மாவை ஒரு முறை முறைத்தாள்.
அவளின் முகமாற்றத்தைப் புரிந்துக் கொண்ட தர்மா "சரி, இருங்க..நான் வந்துர்றேன்.." என்று எங்கையோ ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து மறைந்தான்.
10 நிமிடங்கள் கழிந்தன..
ஒரே ஓட்டமாக கையில் எதையோ தூக்கிக் கொண்டு ஓடிவந்துக் கொண்டிருந்தான் தர்மா. தூரத்திலிருந்து அவன் போய்ச்சேர வேண்டிய இடமானது புகைமூட்டம் கண்டிருப்பதைக் கண்டு சற்றே பதறினான். ஓட்டத்தை மேலும் துரிதப்படுத்தினான். "நான் இருக்கிறேன், நான் இருக்கிறேன் உமாவிற்கு" என்று மனதில் பேசிக் கொண்டே சேர வேண்டிய இடத்தை மூச்சிறைக்க அடைந்தான்.
அங்கு அவன் கண்ட காட்சி...
விக்கி விறகுகளைத் தீயிலிட்டுக் கொண்டிருந்தான். ரூபன் பானையை விறகு மேல் வைக்க அழகிரி கீரை நறுக்கிக் கொண்டிருந்தான்.
"டேய் இந்தாங்கடா, உப்பு, புளி, மிளகாய் எல்லாம் இருக்கு, வீட்டுலேந்து சுட்டுட்டு வந்தேன்.. இன்னிக்கி நம்ப கூட்டாஞ்சோறுதான் உமாவுக்கு சாப்பாடு..." என்று பையை கீழே வைத்துவிட்டு உமா அருகில் அமர்ந்துக் கொண்டான் தர்மா.
"உமா உனக்கு ரொம்ப பசின்னு எங்களுக்குத் தெரியும், நாங்க இருக்கும்போது உனக்கென்ன கவல, உன் அப்பா கிடக்குறாரு, கவலைய விடு.." என்றான் ஆறுதலோடு.
அவன் அப்படி சொல்லி வாயை மூடவில்லை, எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு பிய்ந்த செருப்பு விறகு அடுப்பில் வந்து விழுந்தது. அனைவரின் பார்வையும் ஒரே பக்கம் திரும்பியது, விக்கி, ரூபன், அழகிரி பெற்றோர்கள் கையில் வார்ப்பட்டையோடு நின்றுக்கொண்டிருந்தார்கள். அனைவரின் முகத்திலும் கொலைவெறி.
"டேய், எங்கேர்ந்துடா வந்துச்சி இந்த காய்கறிகள்லாம்..!!"
"அது.. அதுவந்து.. இல்லம்மா நாங்களே நட்டு வெச்சோம்.." அழகிரி சமாளிக்க முயன்றான்.
"ஆமாம்மா.." என்று ரூபனும், விக்கியும் தலையசைக்க,
"தட்டு, பானைலாம் நீங்களே வாங்குனீங்களோ..?"
ஒருவன் ஆமாம் என்கிறான், ஒருவன் இல்லை என்கிறான்.. பின் ஒருவரையொருவர்ப் பார்த்துக் கொண்டு அசடு வழிகின்றனர்.
அடுத்தகணம் வார்ப்பட்டை அவர்களை நோக்கி பறந்து வந்தது..
எல்லோரும் கண நேரத்தில் எஸ்கேப்..!! உமாவைத் தவிர..!!
எவர் சில்வர் பாத்திரங்கள் நெருப்பில் பரிதாபமாய் தீய்ந்துக் கொண்டிருந்தன.
"பத்து வயசுதான் ஆகுது, அதுக்குள்ள என்னான்னே வேலைப் பண்ணுதுங்க பாருங்க.. எல்லாம் நீங்க கொடுக்கூற செல்லம், வரட்டும் வீட்டுக்கு...!!!"
அந்தக் காடு மண்டிக் கிடந்த புதர்களுக்கு மத்தியில் மீண்டும் உமாவின் தேம்பியழும் ஓசை மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது.
0 பேரு வெத்தல போட வந்தாங்க..:
Post a Comment
தமிழ்ல சொல்லணுமா, இங்க தட்டுங்க.. தமிழ் தட்டசுவான், வந்து வெத்தல போட்டதுக்கு நன்றி.. :)