ஆலமர ரகசியம்


"என்ன செல்வம், இந்த பக்கம்..ஜாமான் எதாச்சும் வாங்க வந்தியா..?

தாப்பா பட்டிணத்திற்கு முக்கிய ஒரு வேலையாக வந்திருந்த செல்வத்தை தற்செயலாக சாலையோரமாக சந்தித்த பொன்னையா அப்படிக் கேட்டார்.

"அப்டிலாம் ஒன்னும் இல்லண்ணே, கூட்டாளிய பாக்க வந்தேன், அவனுக்குதான் துங்கு பண்ணிகிட்டு இருக்கேன்..." என்று கூறிவிட்டு யாரையோ எதிர்ப்பார்ப்பவன் போல் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தான்.

"சரிடா.. நான் வரேன்"ன்னு பொன்னையா அங்கிருந்து நடந்து அருகிலிருந்த ஒரு பஸ் ஸ்டாப்பில் அமர்ந்தார்.

"ஐயோ, இவன் என்ன இந்த நேரத்துல.. பாத்துட்டானே.. காரியம் உருப்பட்ட மாறிதான்..!" என்று பொன்னையாவை மனதில் கரித்துக் கொண்டே அங்கிருந்து சற்று மறைவான இடத்தில் ஒதுங்கினான் செல்வம்.

10 நிமிடங்கள் கழிந்தது...

செல்வம் கைப்பேசி அலறியது.

"டேய் நாதாரி.. எங்கடா இருக்கே..! எவ்ளோ நேரமா காத்துகிடக்குறேன் தெரியுமா..!"

"மச்சி வந்துட்டேண்டா, கொஞ்சம் உன் சோத்துக்கை பக்கம் பாரு.."

செல்வம் திரும்பிப் பார்த்தான், ஜீவா ஒதுக்குப்புறமான இடத்தில் மோட்டார் வண்டியை ஓரங்கட்டி அதன் மீது அமர்ந்திருந்தான். செல்வத்தை அங்கு வருமாறு கையசைத்தான்.

செல்வம் அவனருகே வந்ததூம், "சரி, வா.. அந்த ஆலமரத்துகிட்ட போவோம், பொறவு யாராச்சும் பாத்துடாணுங்கன்னா கஷ்டம்.." என்றுக் கூறி செல்வத்தை ஓர் ஆலமரத்தடிக்கு கூட்டிச் சென்றான் ஜீவா.

இருவரும் ஆலமரத்தடியின்கீழ் நின்றனர்.

" டேய், எனக்கு தெரிஞ்ச ஆளு இங்கதாண்டா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சுத்திகிட்டு இருந்தான்.. வீட்டுல சொல்லித் தொலைச்சிறப் போறாண்டா " என்று செல்வம் கூற,

"கவலபடாத மச்சி, மேட்டர கண்ணும் காதும் வெச்சமாறி முடிச்சிறலாம்..." என்று ஜீவா நம்பிக்கையோடு கூறினான்.

"டேய் ஜீவா, என் வாழ்க்கையிலியே இந்த மாறி காரியம் பண்ணதில்லடா.. எனக்கு பயமா இருக்குடா.. யாராச்சும் பாத்துட்டா என் வீட்டுக்கு நான் பதில் சொல்லி ஆகணும்..!"

"மச்சி ப்ளீஸ்டா, டென்ஷன் ஆகாதே.. எனக்கும் இது பழக்கம் இல்லியா, அதான் கூச்சமா இருக்கு.. நீ இருக்குறேங்குற தைரியத்துலதான் இப்டி ஒரு காரியம் செய்ய துணிஞ்சேன்.."

செல்வமும் ஜீவாவும் குசுகுசு என்று பேசிக் கொண்டிருந்ததை, ஒரு 30 அடி தூரத்தில் இருந்த கள்ளுக்கடையில் அமர்ந்திருந்தவர்கள் சிலர் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

"டேய், அங்க பாரு, எல்லாம் நம்மளதான் பாத்துகிட்டு இருக்காணுங்க, வெக்கமா இருக்குடா.. சே!.."

ஜீவா அந்த கள்ளுக்கடையை பார்த்துக்கொண்டே "மச்சி ப்ளீஸ்டா, எனக்கு நாக்கு வரண்டு போச்சுடா..!" என்று காலில் விழாதக் குறையாகக் கெஞ்சினான்.

"காசை யாரு, உன் அப்பனா கொடுப்பான், எடு காசே..!"

"தேங்க்ஸ்டா மச்சி, நான் இங்கையே நிக்கிறேன், நீ போய் வாங்கிட்டு வந்துரு.." என்று கூறிவிட்டு செல்வத்தின் கையில் ஒரு பை முடிச்சைக் கொடுத்தான்.

"எனக்கு மானம் போகப் போறது நிச்சயம்.." என்று முனகிக் கொண்டே நடந்தான் செல்வம்.

______________________________________________________

15 நிமிடங்கள் கழித்து...

"மச்சி, உன் உதவிய நான் மறக்க மாட்டேன் டா.. என் வயித்துல கள்ளே, சே..சே பால வாத்துட்டே.." என்று ஜீவா செல்வத்தின் கையைக் குலுக்கினான்.

"டேய், நான் உள்ளுக்கு போகும்போது யாராச்சும் தெரிஞ்சவன் பாத்தானா..?"

"இல்லடா மச்சி அதுலாம் ஒன்னும் யாரும் பாக்கல" என்றவன் தலை முடியைக் கோதிக் கொண்டான். அச்சமயம் இரு அழகிய வாலிபப் பெண்கள் இவனைப் பார்த்துக்கொண்டே கடந்துச் சென்றனர்.

"சரிடா, நான் கிளம்புறேன்.. ரொம்ப தேங்ஸ்டா.." என்று கூறிவிட்டு ஜீவா மோட்டாரை எடுத்து ஒரு முறுக்கு முறுக்கி விட்டு அந்த இரு பெண்களும் பார்க்கும்படி வில்லிங் எடுத்துச் சென்றான்.

செல்வம் தலையைக் கீழே போட்டுக் கொண்டு நடந்தான்.

"இவன்லாம் ஒரு கூட்டாளி.. சே!" என்று முனகிக் கொண்டே அவன் ஒரு பாசாக்கடையை கடக்கும்பொழுது, அக்கடையின் தவுக்கே "வோய், லூ தாக் மாவ் ஐசி கா?" என்று உரக்கக் கூறி செல்வத்தின் அடையாளக்கார்ட்டை உயரத் தூக்கிப் பிடித்துக் காட்டினான்.

ஜீவாவின் சங்கிலியை அடகுவைத்துவிட்டு, வருகின்ற அவசரத்தில் அடையாள அட்டையை அங்கேயே வைத்துவிட்டது அப்பொழுதுதான் செல்வத்திற்கு ஞாபகம் வந்தது. அங்குள்ளவர்கள் சிலர் செல்வத்தை ஒருமாதிரியாகப் பார்த்தனர்.

செல்வம் தலைகுனிந்தான். வெட்கம் அவனைப் பிடுங்கித் தின்றது. அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டு ஓட்டமும் நடையுமாக இடத்தைக் காலி செய்தான்.

இந்த கூத்தை, சற்றுத் தொலைவிலுள்ள பஸ் ஸ்டாப்பில் ஓர் உருவம் கவனித்துக் கொண்டிருந்தது.

0 பேரு வெத்தல போட வந்தாங்க..:

Post a Comment

தமிழ்ல சொல்லணுமா, இங்க தட்டுங்க.. தமிழ் தட்டசுவான், வந்து வெத்தல போட்டதுக்கு நன்றி.. :)

என்னைப் பற்றி..

My photo
அதான் தெரியிலிங்க..தேடிகிட்டு இருக்கேன்,கண்டுபுடிச்சேனா கண்டிப்பா சொல்றேன் நான் யாருன்னு..

இப்ப மணி..

பதிவெண்


Template Brought by :

blogger templates