இருப்புப் பாதை


ஆண்டு 2007

"பச்சக்காடு..! ஒரு வசதி இல்ல ஒண்ணும் இல்ல, எப்டிதான் இங்க மனசாளுங்க வாழ்றாங்கன்னே தெரியல..!" என ஆச்சரியத்தோடு சுற்றி முற்றி பார்த்துக்கொண்டிருந்தான் அய்யாவு. நேற்றைய பயணக் களைப்பில் முழுவதும் சோர்ந்த அவனுக்கு புதிய சூழலில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள இயலவில்லை. கொழுத்தும் வெயிலில் வெகுநேரமாகக் காத்திருந்து காத்திருந்து, கோபம் ஒரு பக்கம் தலைக்கேறி சூடாகினான் அய்யாவு.

"பட்டணத்து வாழ்க்க, வாழ்க்கதான்.. எல்லாமே இருக்கு, இங்க என்னதான் இருக்குன்னு அது அடம்பிடிக்கிது..!" இப்படி முனகிக் கொண்டே வீட்டின் ஓரமாகக் காடுமண்டிக் கிடந்த புதர்களின் வழியாக நடந்துச் சென்று, வீட்டின் பின்புறம் 20 அடி தூரத்தில் இருக்கும் இருப்புப் பாதைகளை அடைந்தான் அய்யாவு.

இருப்புப் பாதைகளைக் கண்டதும் அய்யாவுக்கு சிறுப்பிள்ளைத்தனம் கவ்விக் கொண்டது.

"ம்ம்.. இதுல உக்காந்து பாத்ததே இல்ல, யாரும் பாக்கலே, கொஞ்சம் நேரம் உக்கார வேண்டியதான்.." என்று மனதில் எண்ணியவாறு இருப்புப் பாதைகள் செல்லும் இரு திக்குகளிலும் இரயில் ஏதேனும் வருகின்றதா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு தண்டவாளத்தில் உட்கார முயன்றான்.

"அ..ஆ..ஆஆ.... ஐயோ அம்மா....!!!"

கையை வைத்தவன் சுருக்கென்று மறுகணமே கையை இழுத்துக் கொண்டு கையை உதறினான். மொட்டை வெயிலில் இருப்புப் பாதை என்ன சில்லென்றா இருக்கும், பாவம் அவன் அதை யோசிக்கவில்லை.

கையை உதறிக் கொண்டு நின்றவனை, முதுகில் யாரோ தட்டியதும் வெடுக்கென்று பயந்துபோய் திரும்பினான். மலர்விழி அங்கு நின்றுக் கொண்டிருந்தாள்.

"சே..நீயா.. பயந்துட்டேன்.."

"இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க? எத்தன ரயிலு போதுன்னு கணக்கு பண்ணிகிட்டு இருக்கியா?" என்று அய்யாவை கிண்டலடித்தாள் மலர்விழி.

"அத விடு.. சரி, கிழவி என்னதான் சொல்லுது..? வருதா இல்லியா..?"

மலர்விழி இல்லை என்பதற்கு அடையாளமாக தலையை ஆட்டினாள்.

"தலைல நாலு தட்டு தட்டி கூட்டிட்டு வர வேண்டியதானே..!"

"சே, அப்டி சொல்லாத.. பாவம் தேள் கொட்டி உடம்பு முடியாம இருக்காங்க, வயசாகிட்டாலே பொறந்த இடத்த உட்டுட்டு வர கஷ்டப்படுவாங்க.."

"அதுக்குன்னு இப்டியா, உயிருக்கு ஆபத்து இருக்குன்னு தெரிஞ்சுமா இங்கையே இருப்பேன்னு அடம் பிடிப்பாங்க..? பாத்துக்க யாருமே இல்ல வேற, எதாச்சும் ஆச்சுனா எப்டி நமக்குத் தெரியும் சொல்லு..!"

"நீ சொல்றதும் சரிதான், அப்டின்னா நீயே போய் கூப்பிட்டு பாரு.." என மலர்விழி மீண்டும் கிண்டலடிக்க, "ஐயோ, வேணாண்டா சாமி, ஏற்கனவே அந்த வீட்டுல ஒரு குண்டூசி விழுந்த சத்தம் கேட்டாலே பொறுக்காது அந்த கிழவிக்கு..!" என்று பின்வாங்கினான் அய்யாவு.

"சரி, நான் வரேன்" என்று கூறிவிட்டு வீட்டை நோக்கி நடந்தால் மலர்விழி.

________________________________________________________

ஆண்டு 1951

"காமாட்சி அம்மா.. காமாட்சி அம்மா...! சுந்தரம்மா வந்துருக்கேன்.."

கிணற்றில் நீரை வாரியபடியே "என்ன சுந்தரம்மா..? இரு வாரேன்.." என்று மறுமொழி கூறிவிட்டு வாரிய நீரை பெரிய பானையில் இரைத்துவிட்டு, வரவேற்பறைக்குச் சென்றார் காமாட்சி அம்மா.

"வாம்மா சுந்தரம்.. ஊருக்கு போனியே.. இப்பதான் வந்தியா?"

"ஆமா, இன்னிக்குத்தான் வந்தேன்.." என்று கவலைத் தோய்ந்த தொனியில் இழுத்தாள் சுந்தரம்மா.

"ஏன் சுந்தரம், போன காரியம் என்னாச்சி.. கவலையா இருக்கே..?"

"அது ஒன்னும் இல்ல, வர்ற வழியில பெரியநாயகிய.. பாத்தேன்.."

காமாட்சி அம்மாவுக்கு புருவம் நிமிர்ந்தது.

"அவ எங்க.. அவளுக்கு என்ன ஆச்சி..!!" காமாட்சியம்மா பதறினாள்.

"நீ, பதறாதம்மா.. அவளுக்கு ஒன்னும் இல்ல.. நல்லாதான் இருக்கா.."

"சுந்தரம், அவ எங்க இருந்தாலும் உடனியே கையோட கூட்டியாந்துருக்கக் கூடாதா.. வயசான காலத்துல இப்டி அழ வெச்சி பாக்கணும்னு முடிவு பண்ணிட்டாலா அவ.."

" பெரியநாயகி எங்கையும் போய்ருல.. ரயில்வே ஸ்டேஷன்ல உக்காந்துகிட்டு அழுதுகிட்டுருந்துச்சி.. கையோட சமாதானப்படுத்தி கூட்டியாந்தேன்.. வாசற்படியிலியே நின்னுகிட்டு இருக்கு.. போயி கூப்டு.. நீ கூப்டாம வரமாட்டா..! போ.."

காமாட்சி அம்மா, வாசற்படியில் நின்றுக்கொண்டிருந்த பெரியநாயகியைக் கண்டதும் ஓடிச் சென்று அவளைக் கட்டிப் பிடித்து அழுதாள். என்னதான் இருந்தாலும் பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லல்லவா..

"அம்மா இனிமே உனக்கு மாப்பிளையே பாக்க மாட்டேமா.. இனிமே மருந்து குடிப்பேன் அது இதுன்னு அம்மாவ அழ வெக்கக்கூடாது.. என்ன.." காமாட்சி பெரியநாயகியை வீட்டினுள் அழைத்துச் சென்றாள்.

பெரியநாயகி பேய் அறைந்ததுபோல் காணப்பட்டாள். அம்மாவிடம் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் நேரே தனதறைக்குச் சென்று கட்டிலில் சாய்ந்தாள்.



"காமாட்சியம்மா.. கொஞ்சம் இங்க வாங்களேன்.." சுந்தரம்பாள் அழைத்தாள்.

"சொல்லு சுந்தரம்.."

"பெரியநாயகி காதலிச்ச அந்தப் பையன் அடிபட்டு இறந்து ரெண்டு வாரந்தான் ஆவுது, அதுக்குள்ள நீங்க மாப்பிள அது இதுன்னா? இப்பதானே 18 வயசாகுது.. போகப் போகச் சரியா ஆயிரும்மா.. ஒரு வயசு வந்ததும் அதுவே எனக்கு மாப்பிள பாருங்கன்னு வந்து நிக்கும்.. விடுங்க.."

"ம்ம்.. இவ எதுக்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்கிறவம்மா.. என்னிக்கு இவளுக்கு நான் மாப்பிள பாத்து..? ம்ம்..."

________________________________________________________

ஆண்டு 2007

"அய்யாவு...! டேய் எந்திரிடா..!"

நெளிந்துக் கொண்டே எழுந்தவன் "யேன் இப்ப எழுப்புன?" என்று மலர்விழியிடம் கேட்டான்.

" அம்மா, அழுதுகிட்டு இருக்காங்க.."

"ஐயோ..யேன்லா? என்னாச்சி?"

"மெந்தகாப் மாமி இருக்காங்கலே, அவுங்கல தேள் கொட்டிருச்சாம்.. வலியோட ஒண்டியா ஆஸ்பத்திரிக்கு 10 கிலோ மீட்டர் நடந்து போயிருக்காங்கலாம்டா.."

"அட கடவுளே, இப்ப என்ன பண்ண போறீங்க..?"

"இன்னிக்கு ராத்திரி எல்லாரும் மெந்தகாப் போறோம், நீயும் வரியா..?"

"சரி..நானும் அவுங்கள பாத்தது இல்ல.. பாத்த மாறி இருக்கும்ல.."

அய்யாவு, மலர்விழி, மலர்விழியின் தாயார், மலர்விழியின் தம்பி கண்ணாயிரம், மலர்விழியின் அண்ணன் மகள் கலைச்செல்வி அன்றிரவே காரில் மெந்தகாப்பிற்குப் புறப்பட்டனர்.

காரில் செல்லுகையில்...

"உனக்குத் தெரியுமாடா.. மாமி இருக்காங்கலே.. அவுங்களுக்கு 75 வயசாச்சி, யாருமே இல்ல.. ஒண்டியாதான் அந்த வீட்டுல தங்கி இருக்காங்க.."

"ஓ.. ஏன், பேசாம உன் வீட்டுல வந்து இருக்கலாம்லே.. நிறைய பேரு இருக்கீங்க.. அவுங்களுக்கும் பொழுதுபோன மாறி இருக்கும்ல.. சரி, அவுங்க புருசன் எங்க..?"

" கல்யாணம் ஆனாதானே புருசன்.."

"கல்யாணம் பண்ணிக்கலையா..?"

"ம்ம்.. சின்ன வயசுல ஒரு பையன உயிருக்குயிரா காதலிச்சாங்க.. கடைசியில அவன் அடிப்பட்டு செத்துபோய்ட்டான்.. அன்னிலேர்ந்து இன்னி வரைக்கும் அவுங்க யாரையும் காதலிக்கல, கல்யாணமும் பண்ணிக்கல.. அவனோட ஞாபகமாவே வாழ்ந்துகிட்டு வராங்க.."

"அட பாவமே.. இப்டி ஒரு காதலா..?"

"ம்ம்.. பெரிய பண்ணை வீட்டுல வாழ்ந்தவங்க.. அவுங்க அம்மா காமாட்சி அம்மாவும் இவுங்கல நெனச்சி நெனச்சி சீக்குல படுத்து உயிரவிட்டாங்க.. ஆனா, சும்மா சொல்லக்கூடாது.. ஆம்பள பசங்க ரெண்டு பேரு இருந்தும், அம்மாவ இவுங்கதான் கடைசிவரைக்கும் வெச்சிக் காப்பாத்துனாங்க.."

"இப்டிபட்ட ஆள நான் பாத்தே ஆகணும்"

"ஆணா ஒன்னு, இவுங்க சரியான பிடிவாதக்காரவுங்க.. யார் அவுங்க வீட்டுக்குப் போனாலும் சரியா பேச மாட்டாங்க.. நீ அங்க வந்துட்டு உன் வால்தனத்த அங்க காட்டாத.. அப்புறம் பாட்டுதான் விழும்.."

"வீடு பெரிய வீடா..?"

"பண்ணை வீட்ட வித்துட்டாங்க, அந்த வீட்டுக்கு எதிருல இருக்குற மேட்டு நிலத்துலதான் இப்ப இருக்காங்க.. எப்ப போனாலும் அவுங்க வாசல்ல உக்காந்துகிட்டு அவுங்க பண்ண வீடு இருந்த நிலத்த பாத்துகிட்டே இருப்பாங்க... யார்கிட்டயும் பேசமாட்டாங்க.."

"ம்ம்ம்.. சொல்ல மறந்துட்டேன், அவுங்க முன்னால் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்.."

"ஓ.. பரவாலியே.. படிச்சவங்கதான்னு சொல்லு.."

இப்படியே பேசிக் கொண்டும் உறங்கிக் கொண்டும் செல்ல காலை மணி பத்துக்கு கார் மெந்தகாப் பட்டிணத்தை வந்தடைந்தது. பட்டிணத்தைக் கடந்து சற்று தொலைவில் கார் ஒரு பாழடைந்த 'ரயில்வே கேட்' அருகே நிறுத்தி வைக்கப்பட்டது.

" வா, இனிமே நடராஜா சர்வீஸ்தான்" என்று மலர்விழி அய்யாவுவிடம் கூறினாள்.

"எங்க அவுங்க வீடு ரொம்ப தூரமா?"

"வா காட்டுறேன்" என்று மலர்விழி முன்னே செல்ல அனைவரும் பின் தொடர்ந்தோம். 'ரயில்வே கேட்டை' தாண்டி ஒரு இருப்புப் பாதை சென்றது. அந்த இருப்புப் பாதையினூடே அனைவரும் 1 கிலோ மீட்டர் தொலைவு நடந்தோம்.

"தோ வீடு வந்துருச்சி..." என்று மலர்விழி ஒரு குடிசை வீட்டை அய்யாவுவிடம் காட்டினாள்.

அய்யாவுவுக்கு தூக்கிப் போட்டது.

"வோய், இங்கதான் ரெண்டு நாளு தங்கணுமா? என்னால முடியாது சொல்லிட்டேன்.."

அனைவரும் அவ்வீட்டின் குடிசை வாசலை அடைந்தனர். அங்கே ஒரு வயதான கிழவி அமர்ந்திருந்தார். எங்களைப் பார்த்ததும், முகத்தில் ஒரு சிறு மாற்றம் கூட ஏற்படவில்லை.

"யேன் வந்தீங்க.. நான்தான் வரவேணானு சொன்னேன்ல.." என்று அக்கிழவி மிரட்டலாகக் கூறியதும் இவர்தான் பெரியநாயகி என்றுப் புரிந்துக் கொண்டான் அய்யாவு. அனைவரும் வீடினுள் நுழைந்த தருணம் முதல் மறுநாள் மதியம்வரை ஒருவருக்கொருவர் மௌனபாசையில் அனைவரும் பேசிக் கொண்டனர்.

"ஏய், என்னாது இது.. இப்டிதான் எல்லாரும்.. ஊமையா இருப்பீங்கலா..!"

"வாய மூடு, மாமி காதுல வெளங்கிற போது..!"

"அடக் கடவுளே..!" என்று சலித்துக் கொண்டான் அய்யாவு.

மறுநாள் விடிந்தது, அய்யாவுவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. வீட்டினுள் இருந்தால் ஊமை வாழ்க்கைத்தான் வாழ வேண்டும் என்று எண்ணியவன் வீட்டின் வெளியே சுற்றிக் கொண்டிருந்தான்.

அச்சமயம்தான் அவன் தண்டவாளம் அருகே உட்கார முனைந்தான்.

________________________________________________________

"சரி மாமி உடம்ப பாத்துகோங்க.. நாங்க போய்ட்டு வறோம்.. எதாச்சும் ஒன்னுன்னா பக்கத்து வீட்டுல சொல்லி எங்களுக்கு ஃபோன் பண்ணுங்க சரியா.."

மதியம் அனைவரும் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தோம். அய்யாவுவும் பெரியநாயகி அம்மாவிடம், "போய்ட்டு வரேன் பாட்டி" என்றான்.

"ம்ம்.. வந்ததுலேர்ந்து சரியாகூட பேசல.." என்றார் பெரியநாயகி.

"சே.. நல்லா பேசியிருக்கலாமே, இதுங்க எல்லாம் சேந்து அது இதுன்னு சொல்லி என் வாய பொத்திருச்சிங்க.." என்று மனதில் நினைத்துக் கொண்டான் அய்யாவு.

அனைவரும் அங்கிருந்து விடைப்பெறும் வேளையில் அய்யாவு மனம் ஒரு கணம் கனத்தது.

"இவுங்கல இப்படி விட்டுட்டு போறதுக்கே மனசு வரலியே.." என்று மனதில் நினைத்தவாறு அக்குடிசை வீட்டைப் பார்த்துக் கொண்டே இருப்புப் பாதையில் நடந்துச் சென்றான்.

வாழ்ந்த சூழலை விட்டுக் கொடுக்காத மனப்பான்மையையும், காதலித்தவனை இன்றுவரை மறக்காத பெரியநாயகி பாட்டியை நினைத்து அய்யாவு பெரிதும் ஆச்சரியப்பட்டான். கிராமம் கிராமம்தான்..

அய்யாவுவிற்கு இப்பொழுது அந்த இடமும், பாட்டியையும் பிடித்துப் போயிருந்தது.




இக்கதை உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இக்கதையில் வரும் கதாப்பாத்திரங்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இக்கதை தொடர்பான கேள்விகள் :

இக்கதையில் வரும் பெரியநாயகிக்கும் மலர்விழி குடும்பத்தினருக்கும் என்ன உறவு?

பெரியநாயகியின் தம்பி குடும்பத்தினர்தான் மலர்விழி குடும்பத்தினர்.

இக்கதையில் அய்யாவுவிற்கும் மலர்விழி குடும்பத்தினருக்கும் என்னத் தொடர்பு?

அய்யாவு மலர்விழியின் உயிர் நண்பன். விடுமுறையைக் கழிக்க மலர்விழியின் வீட்டிற்கு வந்தவன்.

இக்கதை குறித்து எழும் சந்தேகங்களுக்கு விடை, வாசகர்களின் சொந்த யூகங்களாக இருக்கட்டும்.

2 பேரு வெத்தல போட வந்தாங்க..:

Anonymous said...

realy touch my heart n respect madam periyanayagii shabaash to u..........

சித்தன் said...

உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி :)

Post a Comment

தமிழ்ல சொல்லணுமா, இங்க தட்டுங்க.. தமிழ் தட்டசுவான், வந்து வெத்தல போட்டதுக்கு நன்றி.. :)

என்னைப் பற்றி..

My photo
அதான் தெரியிலிங்க..தேடிகிட்டு இருக்கேன்,கண்டுபுடிச்சேனா கண்டிப்பா சொல்றேன் நான் யாருன்னு..

இப்ப மணி..

பதிவெண்


Template Brought by :

blogger templates