அரிக்கேன் விளக்கு



சம்பவம் : 1945-ஆம் ஆண்டு

விடியக்காலை நாலேக்கால் மணி மெயிலும் வந்துருச்சி. அது ஊலையிட்ட சத்தம், எங்கோ இருக்கும் நாலாங்கட்டை வரைக்கும் கேட்டப்பதான் நிறைய பேரு முனகுற சத்தத்த ஒவ்வொரு வீட்டுலையும் கேக்க முடிஞ்சது. யேன்னா அந்த மெயில் வந்துட்டுபோற சத்தந்தான் அவுங்களுக்கெல்லாம் அலாரம். அலாரம் கேட்ட சேவலும் அப்பதான் கூவுனுச்சி.
கொஞ்ச நேரத்துல, அந்த லயத்து வீடுகள்ல மங்களான வெளிச்சம் படர, அய்யா கோயில் பக்கத்துல இருக்குற வீடு மட்டும் இருட்டாவே இருந்துச்சி. அந்த வீட்டு குசினியில சிறு அலசல் சத்தம்.

“எங்க வெச்சி தொலச்சேன்..! ஒன்னு ஓர் இடத்துல உறுப்படியா இருக்கறது இல்ல..! பிள்ளங்க ஏதும் எடுத்து முடிச்சிருச்சுங்கலா..?” இப்படி மொனவிகிட்டே தலமுடிய வாரி முடிஞ்சிட்டு குசினி கதவ தொறந்தா வள்ளியம்மா.

புதுசா வாங்கிப்போட்ட கிளாம்பர்ல ரெண்டு பிள்ளங்களும் தூங்குறத ரசிச்சிகிட்டு இருந்தாரு கந்தையன்.

“யேங்க சுடுத்தண்ணி போட்டேன், வந்து குளிங்க”ன்னு கந்தையனோட பொம்பள குசினியிலேர்ந்து சொல்ல, “விசாலம் இங்க வாயேன், இங்க வந்து பாரு இந்த அட்டகாசத்த"ன்னு மெதுவா கூப்டாரு கந்தையன். குசினியிலேர்ந்து வந்த விசாலம் “அட, ஒன்னுமேல ஒன்னு கால போட்டுகிட்டு எப்படி ஒய்யாரமா தூங்குதுங்க.. பாவங்க இதுங்க, நேத்துலாம் கிழிஞ்ச கிளாம்பர்ல படுத்து எப்டிலாம் புரண்டுகிட்டு கெடந்துச்சுங்க..”

“ஏண்டி, அந்த கிழிஞ்ச கிளாம்பர வள்ளியம்மா பிள்ளைங்களுக்கு கொடுத்துரலாமா, பாவண்டி அதுங்க கொசுக்கடியிலியே படுத்துக் கிடக்குதுங்க..”ன்னு கந்தையன் சொல்லப்போயி விசாலம் மூஞ்சி மாறிருச்சி. பதில் சொல்லாம வெடுக்குனு அங்கிருந்து நடையைக்கட்டினா விசாலம். கந்தையனுக்கு யேன்னு புரிஞ்சது.

துண்ட கட்டிகிட்டு வேட்டிய கையில வெச்சிகிட்டு குளியலறையில நுழைஞ்சவரு, பின்னாடி யாரோ குசினி கதவ தட்டுற சத்தத்த கேட்டதும் கொஞ்ச நேரம் ஆடிப்போய்ட்டாரு கந்தையன். வேட்டிய கதவுல தொங்கபோட்டுட்டு லாந்தர எடுத்துகிட்டு குசினிப்பக்கம்போய் கதவ திறந்து பாத்தாரு..

எதிருல ஓர் உருவம் நின்னுகிட்டு இருந்துச்சி.

“யாரு?”

உருவம் பதில் சொல்லல. விளக்க தூக்கி புடிச்சி வெளிச்சத்துல அந்த உருவத்த பாத்தோனே கந்தையன் பயந்துபுட்டாரு. எதிருல வள்ளியம்மை நின்னுகிட்டு இருந்தா…

வள்ளியம்மை எதார்த்தமா “அண்ணே, நெருப்பட்டி தீந்துருச்சி, லாந்தர் விளக்கு ஏத்தனும்.. நெருப்பட்டி தரீங்களா..”ன்னு கேட்டா.

கந்தையன் ஒருகணம் பின்னாடி திரும்பி வீட்டுக்குள்ளே பாத்தாரு… விசாலம், வீட்டு முன்கதவ தொறந்துகிட்டு இருந்தா.. வழக்கம்போல அவ காலைல 5 மணிக்குலாம் வீட்ட கூட்டி வாசல்ல கோலம் போடுறது வழக்கம்.

அவ வேறபக்கம் பாத்துகிட்டு இருக்குறத ஊர்ஜிதப்படுத்திகிட்டு, “இரு, எடுத்து வரேன்”ன்னு வள்ளியம்மை பக்கம் திரும்புனாரு கந்தையன். வள்ளியம்மை அங்க இல்ல. “எங்க போயி தொலஞ்சிச்சி இது”ன்னு வெளிய எட்டிப் பாத்தாரு. இருட்டுல ஒன்னும் தெரியல.

விசாலம் குசினி பக்கம் வர்ற சத்தம் கேட்டு குசினி கதவ அடைச்சிட்டு, கந்தையன் குளியலறையில நுழையப்போனாரு.

“சீ.. காலங்காத்தால இவ மூஞ்சிலியா முழிக்கனும்.. இதுல அத குடு இத குடுன்னு..!”

“யேண்டி காலங்காத்தாலயே மொனவுற…?”

“இந்த வள்ளியம்மைக்கு வேற வேல இல்லங்க.. மண்ணெண்ண இருந்தா குடு, லாந்தர் விளக்கு ஏத்தனும்னு வந்து நிக்கிது..”

“எப்ப கேட்டா?”

“இப்பதான்.. தோ.. வெளியதான் நின்னுகிட்டுருக்கு..”

“வீட்டு முன்னுக்கா?”

“ஆமாங்க, நீங்க விருவிருன்னு குளிச்சிட்டு வாங்க, வேலைக்குப் போகனும்..”
ன்னு சொல்லிட்டு விசாலம், ஒரு கோள மண்ணென்னைய எடுத்துகிட்டு முன்னுக்கு போனா..
கந்தையனுக்கு வேர்த்துக் கொட்டிருச்சி.

லாந்தர் விளக்கு இல்லாம ஒருவழியா சமாளிச்சி சாமான்கொட்டாய் போய்ட்டுவந்தா வள்ளியம்மை, கொசுக்கடியில புரண்டுகிட்டு இருந்த முருகப்பாவுக்கும் பாலம்மாவுக்கும் கைலிய சரியா போத்தி உட்டுட்டு வாசக்கதவ தொறந்தா. வெளிய வந்தோனே அவ பார்வ பக்கத்துவீட்டு கந்தையன் வீட்டு மேல விழுந்துச்சி. அந்த மங்கலான நிலா வெளிச்சத்துல கந்தையன் வீட்டு வாசக் கதவு தொறந்திருந்தத வள்ளியம்மை பாத்தா..

“ம்ம்ம்.. கந்தையன் அண்ணே எங்க போனுச்சி..?” ன்னு மனசுல ஒரு கேள்விய கேட்டுகிட்டே வள்ளியம்மை ஒடனே குசினிவழியா போயி பக்கத்துவீட்டு குசினிக்கதவ ரெண்டு தட்டுதட்டுனுச்சி. குசினிக்கதவ தொறந்து 85 வயசுக் கிழம் ஒன்னு எட்டிப் பாத்துச்சி.

“என்னா? மண்ணெண்ண வேணுமா? நெருப்பட்டி வேணுமா?"

“அதுலாம் ஒன்னும் வேணாம், இந்த நேரத்துல யேன் வீட்ட தொறந்து போட்டு வெச்சிருக்கீங்க.. சரி, தண்ணி ஏதாச்சும் கலக்கி கொடுக்கட்டுமா?

“இல்ல வேணாம், விசாலம் கலக்கி வெச்சிருப்பா..”

“ஏற்கனவே திருட்டுப் பய கூட்டம் இங்க அதிகம், கதவ பூட்டிகிட்டு போயி படுங்க..”

“நீகூட மொத எங்கையோ தொலைஞ்சிபோய்ட்ட, உன்ன தேடுறதுக்குள்ள சுடுத்தண்ணியும் ஆறிருச்சி, ஆமா.. நெருப்பட்டி கேட்டதானே அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு..”


வள்ளியம்மை குளியலறைய எட்டிப் பாத்துச்சு, பச்ச தண்ணி கூட இல்ல..

கிழம் மொனவிகிட்டே தட்டுத்தடுமாறி வாசல நோக்கி நடந்துகிட்டே, “ஏய் விசாலம், என்னாடி பண்ற அங்கே, மண்ணெண்ணைய கொடுத்துட்டியா..? நம்ம வீட்டு பின்னாடி நிக்கிறா பாரு.."

வாசல்ல விசாலம் வள்ளியம்மைகூட பேசிகிட்டு இருந்தத கந்தையன் பாத்தாரு.

“என்னம்மா வள்ளி, வாசலுக்கு வர்ற, குசினில கதவ தட்டுற.. ஓர் இடத்துல நின்னு எதையும் உருப்படியா கேக்க மாட்டியா..? என்ன மண்ணெண்ண போதுமா, ஏய் விசாலம் போயி நம்ப அரிக்கேன எடுத்துட்டு வா..”

“எதுக்கு இப்ப..?”

“கொண்டு வான்னா கொண்டு வா.. இந்த இருட்டுல பாவம் இந்த புள்ள பால்மரம் எப்படி போயி வெட்டும்..”


விசாலம், கந்தையன ஒரு மொற மொறச்சிட்டு உள்ளுக்கு போறா…

“பரவாலண்ணே, என்கிட்ட லாந்தர் விளக்கு இருக்கு, அக்கா மண்ணெண்ண கொடுத்துருச்சி, இது போதும்ணே..”

“அப்டியா.. ம்ம்ம்… சரி..சரி.. ஏய் விசாலம், பரவாலடி அரிக்கேன் எடுத்து வரவேணாம்..”


எதையோ நெனச்சவரு “இரும்மா கொஞ்ச நேரம்…!”ன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள போனாரு கந்தையன்.

“ஒரு நிமிஷம் கழிச்சி வெளிய வந்தவரு, இந்தாம்மா, நேத்துதான் பிள்ளைங்களுக்கு கிளாம்பர் ஒன்னு வாங்குனே, பழச நீ வெச்சிக்க உன் பிள்ளைங்களுக்கு போட்டு உடு..”

அந்த கிழம் வீட்டு வாசல்ல ஓட்டப் பாயே கைல வெச்சிகிட்டு பண்ற கூத்து எல்லாத்தையும், வள்ளியம்மை தன்னோட வீட்டு வாசல்கிட்ட மறைவா நின்னு பாத்துகிட்டு இருந்தா..

“ம்ம்… வயசானபொறவு, பிள்ளங்க பெத்தவங்கல உட்டுட்டு போய்ட்டாலே மூளை இப்டிதான் கலங்கிப் போயிரும்போல.. ஒண்டியாவே பேசிக்கிது, அப்டி யார் கூடதான் பேசுதோ… செத்துப்போன விசாலம் கிட்ட பேசுதோ.."ன்னு மனசுல செத்துப்போன தன்னோட புருஷன நெனச்சிகிட்டே, தேடித் தேடி கடைசியில கண்டுபிடிச்ச நெருப்பட்டிய வெச்சி லாந்தர் விளக்க கொளுத்துனா வள்ளியம்மா… அய்யா கோயில் பக்கத்து வீடு இப்ப மங்கலான வெளிச்சத்துக்கு வந்துருச்சி.

0 பேரு வெத்தல போட வந்தாங்க..:

Post a Comment

தமிழ்ல சொல்லணுமா, இங்க தட்டுங்க.. தமிழ் தட்டசுவான், வந்து வெத்தல போட்டதுக்கு நன்றி.. :)

என்னைப் பற்றி..

My photo
அதான் தெரியிலிங்க..தேடிகிட்டு இருக்கேன்,கண்டுபுடிச்சேனா கண்டிப்பா சொல்றேன் நான் யாருன்னு..

இப்ப மணி..

பதிவெண்


Template Brought by :

blogger templates